Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா மீது 100% வரி: ஐரோப்பிய யூனியனுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கோரிக்கை

* இந்தியாவை பேச்சுவார்த்தைக்கு அழைத்துக்கொண்டே இரட்டை வேடம் போடுவதாக குற்றச்சாட்டு

வாஷிங்டன்: பிரதமர் மோடி நல்ல நண்பர் என்றும், இந்தியாவுடன் வர்த்தக பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப் மறுபுறம் ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா மீது 100 சதவீத வரியை விதிக்க வேண்டுமென ஐரோப்பிய யூனியனிடம் வலியுறுத்தி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதன் மூலம் டிரம்பின் இரட்டை வேடம் அம்பலமாகி உள்ளது. அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா அதிகமான வரி விதிப்பதால் 25 சதவீத பரஸ்பர வரியும், ரஷ்யாவிடம் அதிகளவு கச்சா எண்ணெய் வாங்குவதற்கு அபராதமாக மேலும் ஒரு 25 சதவீத வரியும் சேர்த்து இந்திய இறக்குமதி பொருட்கள் மீது 50 சதவீத வரியை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் விதித்தார்.

இதனால் அமெரிக்காவுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்யும் இந்திய ஏற்றுமதியாளர்களும், ஏற்றுமதி நிறுவனங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பலர் வேலைவாய்ப்பை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

மேலும், டிரம்பின் 50 சதவீத வரியால் இந்தியா-அமெரிக்கா இடையேயான ஆழமான நட்பிலும் விரிசல் ஏற்பட்டுள்ளது. அதிபர் டிரம்ப் பலமுறை போனில் தொடர்பு கொள்ள முயன்றும் பிரதமர் மோடி புறக்கணித்ததாக கூறப்பட்டது. இதுதவிர, இந்தியா-அமெரிக்கா இடையேயான இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தையும் பாதியிலேயே முடங்கியது. கடந்த ஆகஸ்ட் மாதம் அமெரிக்க அதிகாரிகளின் இந்திய பயணம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

அமெரிக்காவின் வரி விதிப்பால், வர்த்தகத்தை பன்முகப்படுத்த பிரதமர் மோடி சமீபத்தில் சீனாவில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு (எஸ்சிஓ) மாநாட்டில் கலந்து கொண்டார். அங்கு, சீனாவுடன் நீண்ட கால பகையை மறந்து அதன் அதிபர் ஜின்பிங்குடன் நெருக்கம் காட்டினார். அமெரிக்காவுக்கு எதிரான கொள்கைகள் கொண்ட சீனா, ரஷ்யாவுடன் இந்தியாவும் இணைந்தது. இது அதிபர் டிரம்புக்கு தரும் எச்சரிக்கையாக இந்தியா காய் நகர்த்தியது. அதே போல, பிரதமர் மோடியின் சீன பயணத்திற்கு பிறகு அதிபர் டிரம்பிடம் திடீர் மாற்றம் ஏற்பட்டது. கடந்த வாரம் பேட்டி அளித்த டிரம்ப், பிரதமர் மோடியை தனது நெருங்கிய நண்பர் என மீண்டும் புகழ ஆரம்பித்தார்.

இந்தியா உடனான நட்பு என்றும் மாறாதது என்றும், சில சூழல்களால் சில கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதாகவும் டிரம்ப் கருத்து தெரிவித்தார். எனவே, இந்தியா-அமெரிக்கா இடையேயான பிரச்னை விரைவில் தீரும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த எதிர்பார்ப்பை மேலும் உறுதிபடுத்தும் வகையில், அதிபர் டிரம்ப் நேற்று முன்தினம் தனது ட்ரூத் சமூக ஊடக தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘‘இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக தடைகளை நிவர்த்தி செய்ய இந்தியாவும் அமெரிக்காவும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். எனது மிகவும் நல்ல நண்பர் பிரதமர் மோடியுடன் வரும் வாரங்களில் பேச ஆவலுடன் காத்திருக்கிறேன். இனி இரு பெரிய நாடுகளும் வெற்றிகரமான முடிவுக்கு வருவதில் எந்த சிரமமும் இருக்காது என நான் உறுதியாக நம்புகிறேன்’’ என்றார்.

டிரம்பின் பதிவைத் தொடர்ந்து அடுத்த சில மணி நேரத்தில் பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் அளித்த பதிலில், ‘‘இந்தியாவும் அமெரிக்காவும் நெருங்கிய நண்பர்கள், இயற்கையான பங்காளிகள். இரு நாடுகளும் வர்த்தக பேச்சுவார்த்தைகளை விரைவில் முடிக்க பாடுபடுகின்றன. அதிபர் டிரம்புடன் பேச ஆவலுடன் காத்திருக்கிறேன். நமது இரு நாட்டு மக்களும் பிரகாசமான, வளமான எதிர்காலத்தை பெற நாங்கள் இணைந்து செயல்படுவோம்’’ என்றார். இதனால் விரைவில் இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் முடிவாகி, வரிப் பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என கருதப்பட்ட நிலையில், இந்த விஷயத்தில் அதிபர் டிரம்பின் இரட்டை வேடம் அம்பலமாகி அதிர்ச்சியை

ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்தியா-இங்கிலாந்து இடையே இருதரப்பு தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது.

அதே போல, ஐரோப்பிய யூனியனுடன் தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள இந்தியா தீவிர முயற்சி எடுத்து வருகிறது. இந்த சூழலில், பிரதமர் மோடியுடன் நட்பு பாராட்டும் அதிபர் டிரம்ப் மறுபுறம், இந்தியா மீது 100 சதவீத வரியை விதிக்க வேண்டுமென ஐரோப்பிய யூனியன் தலைவர்களிடம் கூறியிருக்கிறார். உக்ரைனில் போரை ரஷ்யா மேற்கொண்டு தொடர்ந்து நடத்த தேவையான வருவாயைக் குறைப்பதற்கான வழிகளைப் பற்றி விவாதிக்க வாஷிங்டனில் கூடியிருந்த மூத்த அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளுக்கு இடையே நடைபெற்ற கூட்டத்தில் டிரம்ப் இந்த அசாதாரண கோரிக்கையை முன்வைத்ததாக தி பைனான்சியல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதுபற்றி ஒரு அமெரிக்க அதிகாரி கூறுகையில்,’நாங்கள் 100 சதவீத வரி விதிக்க தயாராக இருக்கிறோம். அதை இப்போதே செய்யத் தயாராக இருக்கிறோம். ஆனால் எங்கள் ஐரோப்பிய பங்காளிகள் எங்களுடன் முன்வந்தால் மட்டுமே நாங்கள் இதைச் செய்யப் போகிறோம்’ என்று தெரிவித்துள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

* இத்தாலி பிரதமருடன் மோடி பேச்சுவார்த்தை

சுமார் 8 ஆண்டு இடைவெளிக்குப்பிறகு இந்தியாவும் ஐரோப்பிய யூனியனும் கடந்த 2022ல் தடையில்லா வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்கின. இந்த ஒப்பந்தத்தை இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக இரு தரப்பினரும் இந்த வாரம் டெல்லியில் 13வது சுற்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இந்நிலையில், ஐரோப்பிய யூனியனில் அங்கம் வகிக்கும் 27 நாடுகளில் ஒன்றான இத்தாலி பிரதமர் ஜியார்ஜியோ மெலோனியுடன் பிரதமர் மோடி நேற்று தொலைபேசியில் உரையாடினார். அப்போது, இந்தியா, ஐரோப்பிய யூனியன் இடையேயான தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். இந்த ஒப்பந்தத்தை ஆதரித்ததற்காக மெலோனிக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார். மேலும், ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான வழிகள் குறித்தும், இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடத்தை செயல்படுத்துவது குறித்தும் மெலோனியுடன் மோடி ஆலோசித்துள்ளார்.

* அமெரிக்காவில் இந்தியப் பொருட்களுக்கான வரி 50 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

* அதே நேரத்தில் சீன பொருட்கள் மீதான வரி 30 சதவீதமாக உள்ளன.