Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதில் சீனாவுக்கு நெருக்கமாக இந்தியா உள்ளது 2வது கட்ட தடைகளையும் பார்க்கப் போகிறீர்கள்: அதிபர் டிரம்ப் மீண்டும் மிரட்டல்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவிற்கு இரண்டாவது கட்டமாக மேலும் சில தடைகளை விதிக்க உள்ளதாக மிரட்டல் விடுத்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளுக்கும் வரிகளை விதித்து உத்தரவிட்டார். அதிபரின் இந்த வரி விதிப்பு நடவடிக்கையில் இந்தியாவிற்கு 25 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கி உக்ரைனுக்கு எதிரான போரில் நிதியுதவி அளிப்பதாக அதிபர் டிரம்ப் குற்றஞ்சாட்டினார்.

இதற்காக இந்தியா மீது கூடுதலாக மேலும் இந்த 25 சதவீத வரிவிதிப்பை அறிவித்தார். இதன் மூலமாக இந்தியா மீது விதிக்கப்பட்ட மொத்த வரியானது 50 சதவீதமாக அதிகரித்து உள்ளது. இதில் 25 சதவீத புதிய வரியானது நேற்று முதல் நடைமுறைக்கு வந்தது. கூடுதலாக விதிக்கப்பட்ட 25 சதவீத வரியானது அடுத்து 21 நாட்களில் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அதாவது ஆகஸ்ட் 27ம் தேதி முதல் நடைமுறைக்கு வரக்கூடும் என தெரிகின்றது.

இந்நிலையில் நேற்று முன்தினம் அதிபர் டிரம்ப்பிடம் உக்ரைன் மற்றும் ரஷ்யாவுடன் ஒப்பந்தம் எட்டப்பட்டால் இந்தியா மீதான கூடுதல் வரிகள் கைவிடப்படுமா என்ற கேள்விக்கு, அது குறித்து பின்னர் தீர்மானிக்கப்படும் என்று அதிபர் தெரிவித்துள்ளார். மேலும் சீனா போன்ற நாடுகளும் ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும்போது இந்தியாவிற்கு மட்டும் கூடுதல் வரிகள் ஏன் என்றும், இந்தியாவை ஏன் தனிமைப்படுத்துகிறீர்கள் என்றும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

இதற்கு பதிலளித்த அதிபர் டிரம்ப், பரவாயில்லை. வரிகள் விதிக்கப்பட்டு 8 மணி நேரம் மட்டுமே ஆகின்றது. எனவே அடுத்ததாக என்ன நடக்கிறது என்று பார்ப்போம். நீங்கள் இன்னும் நிறையப் பார்க்கப் போகிறீர்கள். நீங்கள் இரண்டாவது கட்ட தடைகளை பார்க்கப்போகிறீர்கள்” என்று தெரிவித்தார்.

* டிரம்ப் - புதின் சந்திப்பு

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்பிற்கும் இடையே வரும் நாட்களில் சந்திப்பு நடத்துவது குறித்து உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

* ரஷ்ய அதிபர் புடினுடன் அஜித் தோவல் சந்திப்பு

ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதால் இந்தியாவிற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கூடுதல் வரியை விதித்துள்ளார். இந்நிலையில் இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நேற்று முன்தினம் ரஷ்யா சென்றார். நேற்று ரஷ்ய அதிபர் புடினை அவர் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.