வாஷிங்டன்: ரஷ்யாவுடன் வர்த்தக உறவு வைத்திருந்ததால் இந்தியா மீது 50% வரி விதித்ததன் மூலம் இருநாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒப்புக் கொண்டுள்ளார். இந்தியா மீது 50 சதவீதம் இறக்குமதி வரி விதித்தது இருதரப்பு உறவில் விரிசலை ஏற்படுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஒப்புக்கொண்டுள்ளார். அவர் ஃபாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ‘ரஷ்யாவிடம் இருந்து இந்தியா தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்கியதற்குப் பதிலடியாக, கடந்த ஆகஸ்ட் 27ம் தேதி 50% வரி விதிப்பு அமல்படுத்தப்பட்டது. முதலில் 25 சதவீத பரஸ்பர வரியும், பின்னர் கூடுதலாக 25 சதவீத அபராத வரியும் விதிக்கப்பட்டது. உக்ரைன் உடனான ரஷ்யாவின் போரை மனதில் கொண்டு, இந்த கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ரஷ்யாவிடமிருந்து இந்தியா எண்ணெய் வாங்குவதால், அவர்கள் மீது 50 சதவீத வரி விதித்தேன். இது எளிதான காரியம் அல்ல. மிகப் பெரிய விஷயம்; அது இந்தியாவுடன் விரிசலை ஏற்படுத்துகிறது’ என்று கூறினார். அமெரிக்காவின் 50% வரி விதிப்பால், ஆண்டுக்கு 190 பில்லியன் டாலருக்கும் அதிகமாக உள்ள இருநாட்டு வர்த்தகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான பேச்சுவார்த்தைகளைத் தொடர்வதற்காக இந்திய வர்த்தகத் துறை அமைச்சர் விரைவில் வாஷிங்டன் செல்ல உள்ளார். இந்த பதற்றமான சூழலுக்கு மத்தியிலும், உறவைச் சரிசெய்யும் அறிகுறிகளும் தென்படுகின்றன.
கடந்த வாரம் பிரதமர் மோடியை மிகவும் நல்ல நண்பர் என்று டிரம்ப் பாராட்டியதுடன், வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படும் என நம்பிக்கை தெரிவித்தார். இதற்கு மோடியும் சமூக வலைதளத்தில் சாதகமாகப் பதிலளித்திருந்தார். மேலும், இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் வேட்பாளரான செர்ஜியோ கோர், இந்த வரி விதிப்பை சிறிய சறுக்கல் எனக் குறிப்பிட்டதோடு, இந்தியாவை அமெரிக்காவுடன் இணைந்திருக்கச் செய்வதே தனது முன்னுரிமை என்றும் கூறியுள்ளார். இந்தியாவின் எரிசக்திக் கொள்கை, நாட்டின் நலன் மற்றும் சந்தை நிலவரங்களைப் பொறுத்தது என இந்திய அரசு தொடர்ந்து வாதிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.