புதுடெல்லி: காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது: ஒருகாலத்தில் இந்தியாவின் மிகவும் நம்பகமான நட்பு நாடான ரஷ்யா, தற்போது இந்தியாவின் வேண்டுகோளை பறக்கணித்து பாகிஸ்தானின் ஜேஎப்-17 போர் விமானங்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஆர்டி-93எம்ஏ இன்ஜின்களை வழங்குவதை தொடர முடிவு செய்திருக்கிறது. ஜேஎப்-17 விமானங்கள் சீனா உருவாக்கியவை.
இந்த விமானங்களுக்கு ஆர்டி-93எம்ஏ இன்ஜின்கள் அவசியம். இந்த விமானத்தின் சமீபத்திய பிளாக் III வகை விமானங்கள் மேம்படுத்தப்பட்ட இன்ஜினுடன், ஆபரேஷன் சிந்தூரின் போது நமது நாட்டிற்கு எதிராக பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் பிஎல்-15 ஏவுகணைகளையும் கொண்டிருக்கும். மேலும், ஆபரேஷன் சிந்தூரில் ஜேஎப்-17 வகை விமானங்களும் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என இந்திய விமானப்படை தளபதியும் கூறியிருக்கிறார்.
இது பிரதமர் மோடியின் தனிப்பட்ட ராஜதந்திரத்திற்கு கிடைத்த மற்றொரு தோல்வி. இந்தியாவால், பாகிஸ்தானை ராஜதந்திர ரீதியாக தனிமைப்படுத்த முடியவில்லை. ரஷ்ய அதிபர் புடின் பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்குகிறார். ஆபரேஷன் சிந்தூரின் போது பாகிஸ்தானுக்கு சீனாவின் ஆதரவும் கிடைத்தது. இவ்வாறு கூறி உள்ளார்.