மாஸ்கோ: ரஷ்யாவில் 3 சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டது. இதை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் சுனாமி ஆபத்து நீங்கியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் காம்செட்கா தீபகற்பம் பகுதியில் பெட்ரோபாவ்லோஸ்கி-காம்சட்கி நகர் உள்ளது. இந்த நகருக்கு 144 கிமீ தொலைவில் கடலில் 5 ரிக்டர் அளவில் நேற்று முதலில் நிலநடுக்கம் ஏற்பட்டது.அதை தொடர்ந்து 6.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
பின்னர் 7.4 என்ற அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து சுனாமி ஏற்படலாம் என பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்தது. மிகப்பெரிய நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ரஷ்யாவின் அவசரகால அமைச்சகமும் சுனாமி எச்சரிக்கையை வெளியிட்டது. கடலோர குடியிருப்புகளில் வசிப்பவர்கள் கரையிலிருந்து விலகி இருக்குமாறு அறிவுறுத்தியது. இதனால் பதற்றம் ஏற்பட்டது.
இறுதியில் சுனாமி ஏற்படும் ஆபத்து இல்லை என்று சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்தது. இதில் உயிரிழப்புகள் அல்லது சேதங்கள் குறித்து உடனடி தகவல்கள் எதுவும் இல்லை. கடந்த 1952, நவம்பர் 4, அன்று,காம்சட்காவில் 9.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்போது 30 அடி உயரத்துக்கு அலைகள் எழுந்த போதிலும் உயிரிழப்புகள் ஏற்படவில்லை.