வாஷிங்டன்: ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது 2ஆம் கட்ட வரிகளை விதிக்கத் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். தற்போது 50 சதவீத வரி உள்ள நிலையில் இந்தியா மீது மேலும் வரிவிதிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. உக்ரைன் மீது ரஷ்யா நேற்றுமுன்தினம் மிகப்பெரிய அளவில் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. 800 டிரோன்களை ஏவி ரஷ்யா நடத்திய தாக்குதலில் உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள அரசு அலுவலக வளாகம் பாதிப்புக்கு உள்ளானது. 4 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பிடம், ‘ரஷ்யா மீதோ அதனிடம் இருந்து எண்ணெய் வாங்கும் நாடுகள் மீதோ புதிதாக ஏதேனும் வரிகள் விதிக்க வாய்ப்பிருக்கிறதா?’ என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த டிரம்ப், ‘ஆம்’ என்று பதில் அளித்தார். வேறுதகவல் எதுவும் தெரிவிக்கவில்லை. உக்ரைன் - ரஷ்யா போரை அதிபராகி 10 நாட்களில் முடிவுக்குக் கொண்டு வருவேன் என்று ஆட்சிக்கு வரும் முன் சூளுரைத்த டிரம்ப், இப்போது இது தான் நினைத்ததைவிட கடினமாக இருப்பதாக ஒப்புக் கொண்டுள்ளார்.
இந்த சூழலில் உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல் தொடர்வது அமெரிக்க நிர்வாகத்துக்கு குடைச்சலாக உள்ளது. டிரம்ப்பின் அமைதி முயற்சிகள் எதுவும் பலனளிக்கவும் இல்லை. இந்நிலையில் தான் 2ஆம் கட்ட வரி விதிப்புகள் இருக்குமா என்பதற்கு டிரம்ப் ஆம் என்று பதில் அளித்துள்ளார். அமெரிக்க கருவூலத் துறை செயலர் ஸ்காட் பெசன்ட் கூறுகையில்,’ ரஷ்யப் பொருளாதாரத்துக்கு பின்னடைவு ஏற்பட்டால் மட்டும்தான் புடின் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைக்கே வருவார்.
அதை நோக்கி அதிபரின் முடிவுகள் அமையும்’ என்றார். இதனால் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா மீது கூடுதல் வரி விதிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்தியப் பொருட்களுக்கு தற்போது வரி 50 சதவீதமாக உள்ளது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. தற்போது மேலும் வரிவிதித்தால் அமெரிக்காவுடன் இந்தியா வர்த்தகம் செய்ய முடியாத அளவுக்கு நிலைமை சீரழியும் என்று வர்த்தகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
* இது ‘ரத்தப் பணம்’டிரம்பின் வர்த்தக ஆலோசகர் நவரோ விமர்சனம்
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவது ரத்தப்பணம் என்று அமெரிக்க அதிபர் டிரம்பின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ விமர்சனம் செய்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,’ உண்மை: ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமிப்பதற்கு முன்பு இந்தியா ரஷ்ய எண்ணெயை பெரிய அளவில் வாங்கவில்லை. இது ரத்தப் பணம், மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
* ரஷ்யா மீது மீண்டும் புதிய தடைகள்?
உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய மிகப்பெரிய தாக்குதலுக்கு பதிலடியாக, அந்நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைக்க கடுமையான தடைகள் விதிக்கப்படும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.
* உக்ரைன் அதிபர் ஆதரவு
ரஷ்யாவுடன் வர்த்தகத்தில் ஈடுபடும் நாடுகளுக்கு அமெரிக்கா விதிக்கும் கடுமையான வரியை ஆதரிப்பதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,’வெட்கக்கேடான தாக்குதல்களால் ரஷ்யா, உக்ரைனுக்கு வலியை ஏற்படுத்த முயல்கிறது. ரஷ்ய அதிபர் புடின், உலகை சோதிக்கிறார் என்பதற்கான தெளிவான அறிகுறி இது.
எனவேதான், ரஷ்யாவுக்கும், அந்நாட்டுடன் தொடர்பில் உள்ளவர்களுக்கும் விதிக்கப்படும் கடுமையான வரிகள் மற்றும் கட்டுப்பாடுகளை ஆதரிப்பது அவசியமாகிறது. இழப்புகளை அவர்கள் உணர வேண்டும். அதுதான் உண்மையிலேயே உறுதியானது. புடின் பேச்சுவார்த்தைகளை விரும்பவில்லை. பேச்சுவார்த்தைக்கு முன்வருபவர்களிடம் இருந்து அவர் ஓடி ஒளிகிறார். போர் நிறுத்தத்துக்கும் தலைவர்கள் மட்டத்திலான சந்திப்புக்கும் மறுக்கும் புடினுக்கு, பொருளாதார சிக்கல்களை ஏற்படுத்துவதுதான் சரியான பதிலடி’என தெரிவித்துள்ளார்.
* அமெரிக்கா புதிய உத்தரவு இந்தியர்களுக்கு பாதிப்பு
அமெரிக்க குடியேற்றமற்ற விசாக்களுக்கு இனிமேல் இந்தியர்கள் தங்களது சொந்த நாட்டில் மட்டுமே நேர்காணலுக்கு முன்பதிவு செய்ய முடியும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, இந்தியாவில் சுற்றுலா மற்றும் வர்த்தக விசா நேர்காணலுக்கான காத்திருப்பு காலம் சென்னையில் ஒன்பது மாதங்கள் வரையிலும், பிற நகரங்களில் மூன்று முதல் ஐந்து மாதங்கள் வரையிலும் உள்ளது. இந்த புதிய விதிமுறையால், அவசரப் பயணம் மேற்கொள்ள வேண்டிய இந்தியர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள். மேலும், 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் 79 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் உட்பட அனைவருக்கும் நேரடி நேர்காணல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
* இந்திய இளைஞர் சுட்டுக்கொலை
அரியானா மாநிலம், ஜிந்த் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கபில் (26). இவர் கடந்த 2022ம் ஆண்டு, சட்டவிரோதமாக ‘டங்கி’ எனப்படும் சட்டவிரோதமான குறுக்கு வழியில் அமெரிக்காவிற்குச் சென்றார். அங்கு பணியாற்றி வந்த நிலையில், பொது இடத்தில் ஒருவர் சிறுநீர் கழிப்பதைத் தடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர், கபிலைத் துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டுக்கொன்று விட்டு தப்பினார். தற்போது அவரது திடீர் மரணத்தால் அரியானாவில் உள்ள கபில் குடும்பம் பெரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளது.