லக்னோ: நாட்டில் ஜி.எஸ்.டி. வரி சீர்திருத்தம் மேலும் தொடரும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் 'அல்டிமேட் சோர்ஸிங் இங்கிருந்து தொடங்குகிறது' என்ற கருப்பொருளில் 2,400 அரங்குகளுடன் அமைக்கப்பட்ட சர்வதேச வர்த்தக கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். கைவினை தொழில்கள், ஜவுளி, தோல் பொருட்கள், வேளாண், தகவல் தொழில் நுட்ப சாதனங்கள் இடம்பெற்றுள்ள இந்த கண்காட்சி, தற்சார்பு இந்தியாவை வலியுறுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர்; மற்றவர்களை நம்பியிருப்பதன் மூலம் முன்னேற்றத்தை அடைய முடியாது.
மற்றவர்களை பெரிதும் சார்ந்திருக்கும் ஒரு நாட்டின் வளர்ச்சி, வரம்புகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இந்தியா தன்னம்பிக்கைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். பிற நாடுகளை சார்ந்திருப்பதை குறைக்க வேண்டும். ஆயுதப் படைகள் உள்நாட்டு தயாரிப்புகளை விரும்புகின்றன; பிறரை சார்ந்திருப்பதை குறைக்க எண்ணுகின்றன. ஒவ்வொன்றும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது என்ற முத்திரையை தாங்கும் அமைப்பை உருவாக்குகிறோம். இந்தியா சுயசார்புடையதாக மாற வேண்டும்; ஒவ்வொரு பொருளையும் இந்தியாவில் தயாரிக்க வேண்டும்; இடையூறுகள் நம்மை திசைதிருப்பாது.
அதில் புதிய திசைகளையும் புதிய வாய்ப்புகளையும் காண்கிறோம். உலகில் இடையூறுகள், நிச்சயமற்றதன்மை இருந்தபோதிலும் இந்தியாவின் வளர்ச்சி சுவாரஸ்யமாக உள்ளது. நமது உறுதிப்பாடு, நமது மந்திரம். நாட்டில் ஜி.எஸ்.டி. வரி சீர்திருத்தம் தொடரும், பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்தி மக்கள் மீதான வரிச்சுமை குறைக்கப்படும். 2014ஆம் ஆண்டில் 1,000 ரூபாய் சட்டைக்கு 117 ரூபாய் வரி விதிக்கப்பட்டது; 2017ல் ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்பட்ட பிறகு வரி 50 ரூபாயாக குறைந்தது. தற்போது ஜி.எஸ்.டி. சீர்திருத்தம் மூலம் வரியாக 35 ரூபாய் மட்டுமே செலுத்த வேண்டியிருக்கும். பாதுகாப்புத்துறையில் இந்தியா துடிப்பான வளர்ச்சியை அடைந்து வருகிறது
தளவாடங்களுக்கு தேவையான ஒவ்வொன்றும் 'இந்தியாவில் தயாரிக்கப்பட்டது' என்ற அடையாளத்தைக் தாங்கி நிற்கும். ரஷ்யாவுடன் இணைந்து உத்தரபிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள தொழிற்சாலையில் AK-203 துப்பாக்கிகளின் உற்பத்தி விரைவில் தொடங்கும் என்று கூறினார்.