அமெரிக்காவுடன் மோதல் நீடிக்கும் நிலையில் ரஷ்யாவிடம் வான் பாதுகாப்பு ஏவுகணை வாங்க முடிவு: இந்தியா அதிரடி
டெல்லி: அமெரிக்காவின் நெருக்கடிகளை தாண்டி ஏற்கனவே செய்துள்ள ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, ரஷ்யாவிடமிருந்து கூடுதலாக எஸ்-400 வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகளை வாங்குவதற்கான பேச்சுவார்த்தையை இந்தியா தீவிரப்படுத்தியுள்ளது. இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே நீண்டகாலமாக ராணுவ ஒத்துழைப்பு இருந்து வருகிறது. இந்தியாவின் முதன்மையான ஆயுத விநியோக நாடாக ரஷ்யாவே திகழ்கிறது. டி-90 பீரங்கிகள், சுகோய்-30 போர் விமானங்கள், பிரம்மோஸ் ஏவுகணைகள், ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா விமானம் தாங்கிக் கப்பல், ஏகே-203 ரக துப்பாக்கிகள் தயாரிப்பு என இரு நாடுகளும் இணைந்து பல முக்கிய ராணுவத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றன. இதன் உச்சமாக, சீனாவின் ராணுவ வலிமையை எதிர்கொள்ளும் வகையில், 5.5 பில்லியன் டாலர் மதிப்பில் ஐந்து எஸ்-400 டிரையம்ப் வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகளை வாங்க இந்தியா கடந்த 2018ம் ஆண்டு ரஷ்யாவுடன் ஒப்பந்தம் செய்தது.
இதில் சில அமைப்புகள் ஏற்கெனவே இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டு, கடந்த மே மாதம் பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின்போது எதிரி ஏவுகணைகளைத் தடுத்து அழித்ததில் முக்கியப் பங்காற்றின. இந்த ஒப்பந்தத்தின் கீழ் இறுதி இரண்டு வான் பாதுகாப்பு அமைப்புகள் 2026 மற்றும் 2027ம் ஆண்டுகளில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தற்போது கூடுதலாக புதிய எஸ்-400 அமைப்புகளை வாங்குவது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக ரஷ்யாவின் ராணுவ-தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான கூட்டாட்சி சேவையின் தலைவர் திமித்ரி ஷுகயேவ் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் டாஸ் செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில், ‘இந்தியா ஏற்கெனவே எஸ்-400 அமைப்புகளை இயக்கி வருகிறது. புதிய விநியோகங்கள் குறித்து தற்போது பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன’ என்று உறுதிப்படுத்தியுள்ளார்.
அமெரிக்காவின் கடும் எதிர்ப்பையும் மீறி ரஷ்யாவிடமிருந்து இந்தியா ஆயுதங்கள் வாங்குவதை ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியா தனது ராணுவத் தேவைகளுக்காக பிரான்ஸ், இஸ்ரேல் போன்ற நாடுகளிடமிருந்தும் ஆயுதங்களை வாங்கத் தொடங்கியிருந்தாலும், 2020 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் இந்தியாவின் மொத்த ஆயுத இறக்குமதியில் 36 சதவீதம் ரஷ்யாவிடமிருந்தே செய்யப்பட்டுள்ளது. ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் இந்தப் புள்ளிவிவரம், ரஷ்யாவுடனான ராணுவ உறவின் முக்கியத்துவத்தை மீண்டும் உறுதி செய்கிறது. இந்நிலையில், கூடுதல் எஸ்-400 அமைப்புகளுக்கான இந்த புதிய பேச்சுவார்த்தை, இந்திய வான் பாதுகாப்புத் திறனை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதோடு, இரு நாடுகளுக்கும் இடையேயான ராணுவக் கூட்டணியை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
100 இலக்குகளை ஒரே நேரத்தில் அழிக்கும்
கடந்த 2018ம் ஆண்டு ரஷ்யாவுடன் 5.43 பில்லியன் டாலர் மதிப்பில் ஐந்து படைப்பிரிவுகள் எஸ்-400 டிரையம்ப் வான் பாதுகாப்பு ஏவுகணைகளை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டது. அவற்றில் மூன்று படைப்பிரிவுகள் ஏற்கனவே இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டு, நாட்டின் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மீதமுள்ள இரண்டு படைப்பிரிவுகள் 2026ம் ஆண்டுக்குள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவற்றின் வெற்றிகரமான செயல்பாட்டைத் தொடர்ந்து, கூடுதல் எஸ்-400 ஏவுகணை அமைப்புகளை வாங்குவதற்காக இந்தியா தற்போது ரஷ்யாவை அதிகாரப்பூர்வமாக அணுகியுள்ளது. எஸ்-400 வான்பாதுகாப்பு ஏவுகணை அமைப்பானது, 600 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளைக் கண்காணித்து, 400 கிலோமீட்டர் வரையிலான தொலைவில் உள்ள போர் விமானங்கள், பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் போன்ற பல்வேறு வான்வழி அச்சுறுத்தல்களை ஒரே நேரத்தில் தாக்கி அழிக்கும் திறன் கொண்டது. இதன் பலகட்ட வரிசை ரேடார் ஆனது, ஒரே நேரத்தில் 100க்கும் மேற்பட்ட இலக்குகளைக் கண்காணிக்கும் வல்லமை பெற்றது.