மாஸ்கோ: ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் பதற்றமான சூழல் ஏற்பட்டது. ரஷ்யாவின் கம்சட்கா பிராந்தியத்தின் கிழக்கு கடற்கரைக்கு அருகில் நேற்று முன்தினம் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிர்வாக மையமான பெட்ரோபவ்லோவ்ஸ்க்-கம்சட்ஸ்கி நகரில் இருந்து கிழக்கே 111 கிலோமீட்டர் தொலைவில், 39 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, பசிபிக் சுனாமி எச்சரிக்கை அமைப்பானது நிலநடுக்கம் காரணமாக சுனாமி ஏற்பட வாய்ப்புள்ளதாக அறிவித்து இருந்தது. ஆனால், சிறிது நேரத்திலேயே சுனாமிக்கான அச்சுறுத்தல் முழுவதுமாக திரும்ப பெறப்பட்டதால் பொதுமக்கள் நிம்மதியடைந்தனர். கடந்த ஜூலை மாதம், இதே கம்சட்கா தீபகற்பத்தில் 8.8 ரிக்டர் அளவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.