கடலூர்: கடலூர் மாவட்டம், முஷ்ணம் அருகே, பாளையங்கோட்டை கீழ்பாதி பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். இவரது மகன் கிஷோர் (23). இவர் கடந்த 2021ல் மருத்துவப் படிப்பிற்காக ரஷ்யா சென்றுள்ளார். அங்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த மற்றொரு மாணவர் எடப்பாடியைச் சேர்ந்த நித்திஷ் என்பவருடன் அறை எடுத்து தங்கி உள்ளார்.
அந்த அறையில் ஏற்கனவே 3 ரஷ்ய மாணவர்களும் தங்கி படித்து வந்தனர். இந்நிலையில் கடந்த 2023ல் மூன்றாம் ஆண்டு மருத்துவப் படிப்பு படித்து வந்த நிலையில் குடும்ப சூழல் காரணமாக ரஷ்யாவில் பகுதி நேர கூரியர் கம்பெனியில் டெலிவரி பாயாக கிஷோர் பணிபுரிந்து வந்தார். அப்போது கூரியரில் போதைப் பொருள் இருந்ததாக 2023 மே மாதத்தில் கிஷோரை ரஷ்யா போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இத்தகவலை அவரது பெற்றோருக்கு தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து கிஷோரை ஜாமீனில் எடுப்பதற்கான முயற்சிகளில் பெற்றோர் ஈடுபட்டு வருகின்றனர்.
ரஷ்யா போலீசார் கிஷோரை உள்நாட்டில் நடைபெறும் உக்ரைன் போருக்கு பயன்படுத்துவதற்காக தனி அறையில் பூட்டி சித்ரவதை செய்து ஆவணத்தில் கையெழுத்து பெற்றுள்ளதாகவும், போருக்கு அனுப்பினால் தன்னை உயிருடன் பார்க்க முடியாது என்றும் கிஷோர் ஆடியோவை அவரது பெற்றோருக்கு அனுப்பி வைத்துள்ளார். இதனைக் கண்ட பெற்றோர் அதிர்ச்சியடைந்து மகனை மீட்க கோரி கடலூர் ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.
இதில் தனது மகன் உயிருடன் வரவில்லை என்றால் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்வோம் என கூறியுள்ளனர். முன்னதாக கிஷோரின் புகைப்படத்துடன் அவரது உறவினர்கள், கிராமத்தினர் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஏற்கனவே உள்துறை அமைச்சகத்திற்கு மனு வழங்கியுள்ளனர். பொய் வழக்கு போட்டு தன்னை போருக்கு அனுப்புவதாக தமிழக முதல்ருக்கு அனுப்பிய ஆடியோவில், இங்க என்ன கொன்னுடுவாங்கன்னு பயமா இருக்கு... என்ன பன்றதுன்னு பாருங்க அய்யா என்று கூறப்பட்டுள்ளது. அவர் பதறியபடி பேசும் ஆடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.