மாஸ்கோ: ரஷ்யாவின் ரியாசான் பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 130 பேர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாஸ்கோவிலிருந்து தென்கிழக்கே சுமார் 250 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஷிலோவ்ஸ்கி மாவட்டத்தில் உள்ள எலாஸ்டிக் ஆலையில் வெள்ளிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. அவசரகால குழுவினர் இடிபாடுகளில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்தினர். இதில் இடிபாடுகளில் சிக்கிய உயிரிழந்த 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்டது.
இது தொடர்பாக ரஷ்யா அரசு செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;
அந்த இடத்தில் உள்ள துப்பாக்கி வெடிமருந்து பட்டறையில் தீப்பிடித்து வெடிப்பு ஏற்பட்டது. தீ விபத்துக்கான காரணம் குறித்து புலனாய்வாளர்கள் முதற்கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளனர். மூன்று பேர் இரவு முழுவதும் இடிபாடுகளுக்கு அடியில் இருந்து மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த தீவிபத்து காரணமாக ரியாசான் பகுதியில் நாளை ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படும். பிராந்தியத்தில் கொடிகள் இறக்கப்படும். கலாச்சார நிறுவனங்கள், தொலைக்காட்சி மற்றும் வானொலி நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் பொழுதுபோக்கு நிகழ்வுகளை ரத்து செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன என ரியாசான் ஆளுநர் பாவெல் மல்கோவ் தெரிவித்தார்.