அமெரிக்க வரி பாதிப்புக்கு இழப்பீடு தருவோம் ரஷ்யாவிடம் தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்குவோம்: நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்
புதுடெல்லி: பெட்ரோல் அல்லது எந்த பொருளாக இருந்தாலும் அதை எங்கு வாங்க வேண்டும் என்பதை இந்தியாதான் முடிவு செய்யும் என்று ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்க அரசு 50 சதவீதம் வரி விதித்துள்ளது. இந்த சிக்கலை சரி செய்வதற்கு ஒன்றிய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதுபற்றி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில்,’ ரஷ்யாவிடமிருந்து இந்தியா தொடர்ந்து கச்சா எண்ணெயை வாங்குவதால் வரி விதிப்பு நடவடிக்கையை மேற்கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருந்தார். சந்தேகத்திற்கு இடமின்றி தொடர்ந்து ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவோம். ரஷ்ய எண்ணெய் இந்தியாவின் தேவைகளுக்கு பொருந்தும்.
அது ரஷ்ய எண்ணெயாக இருந்தாலும் சரி அல்லது வேறு எதுவாக இருந்தாலும் சரி, விகிதங்கள், தளவாடங்கள் அல்லது எதுவாக இருந்தாலும், நமது தேவைகளுக்கு எது பொருத்தமானது என்பதைப் பொறுத்து நாங்கள் முடிவெடுப்போம். நாம் எங்கிருந்து எண்ணெய் வாங்குகிறோம், நமக்கு எது பொருத்தமானது என்பதை அடிப்படையாகக் கொண்டு நாங்கள் எடுப்போம். எனவே, சந்தேகத்திற்கு இடமின்றி நாங்கள் ரஷ்ய எண்ணெயை வாங்குவோம். இந்தியாவின் இறக்குமதி செலவில் கச்சா எண்ணெயின் பங்களிப்பு மிக அதிகமாக உள்ளது.
இந்தியா மீது நடவடிக்கை எடுத்த அமெரிக்கா, ரஷ்யாவிற்கு எதிராக ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சீனா மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. சீனாவிற்குப் பிறகு தானே ரஷ்யாவின் மிகப்பெரிய எண்ணெய் வாங்கும் நாடு இந்தியா. நாட்டில் தற்போது ஜிஎஸ்டி சீர்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் பல கட்டணக் கவலைகள் ஈடுசெய்யப்படும். அதே போல் அமெரிக்காவின் 50 சதவீத வரியை எதிர்கொள்ளும் தொழில்களுக்கு ஒன்றிய அரசு ஆதரவு அளிக்கும். அமெரிக்க வரியால் பாதிக்கப்பட்டவர்களைத் தாங்கிப்பிடிக்க நாங்கள் ஏதாவது ஒன்றைக் கொண்டு வருவோம். இந்தத் தொகுப்பில் பல்வேறு நடவடிக்கைகள் உள்ளன. அவர்களுக்கு உதவ ஏதாவது நிச்சயமாக வரும்’ என்றார்.