மும்பை : ரஷ்ய எண்ணெய் வாங்குவதை படிப்படியாக குறைக்க ரிலையன்ஸ் நிறுவனம் முடிவு எனத் தகவல் வெளியாகி உள்ளது. ரஷ்ய எண்ணெய் நிறுவனங்கள் மீது அமெரிக்கா புதிய தடைகளை விதித்துள்ள நிலையில், எண்ணெய் வாங்கும் திட்டத்தை இந்திய அரசின் வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப சரிசெய்ய திட்டமிட்டுள்ளதாக ரிலையன்ஸ் தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் ரோஸ்நெஃப்ட், லூக்காயில் நிறுவனங்களிடம் இந்திய நிறுவனங்கள் கச்சா எண்ணெய் வாங்குகின்றன. குறைந்த விலையில் ரஷ்ய நிறுவனங்கள் விற்பதால் அங்கு கச்சா எண்ணெய் வாங்குகின்றன இந்திய நிறுவனங்கள். ஆனால் தற்போது அமெரிக்க நெருக்குதலை அடுத்து வளைகுடா நாடுகளில் கச்சா எண்ணெய் கொள்முதலை அதிகரித்துள்ளது ரிலையன்ஸ்.
உக்ரைன் - ரஷ்யா இடையிலான போரை நிறுத்த தீவிர முயற்சி செய்வதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். உக்ரைனுக்கு ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும் ஆயுதங்கள், நிதியுதவி அளித்தும் போரை நிறுத்த முடியவில்லை. ஆதலால், ரஷ்ய வருமானத்தை முடக்கினால் உக்ரைன் உடனான போரை நடத்த முடியாமல் அந்நாடு நிறுத்திவிடும் என்பது ட்ரம்பின் நம்பிக்கையாகும். ஆகவே ரஷ்யாவுக்கு கணிசமான வருவாயை அளிக்கும் கச்சா எண்ணெய் ஏற்றுமதியை முடக்க அதிபர் டிரம்ப் நடவடிக்கை எடுத்து வருகிறார்.
அதன்படி, ரஷ்யாவிடம் அதிக கச்சா எண்ணெய் வாங்குவதாக கூறி இந்திய பொருள்கள் மீது 50% வரியை விதித்துள்ளார் டிரம்ப். தற்போது ரஷ்யாவின் எண்ணெய் நிறுவனங்களுக்கு ரோஸ்நிஃப்ட், லுக்காயிலுக்கு டிரம்ப் தடை விதித்துள்ளார்.ரஷ்யாவின் ரோஸ் நெஃப்ட், லூக்காயில் நிறுவனங்கள் மீது டிரம்ப் விதித்த தடையால் ரிலையன்ஸுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவிடம் குறைந்த விலைக்கு கச்சா எண்ணெய் வாங்குவதால் ரிலையன்ஸுக்கு பெரும் லாபம் கிடைத்து வந்த நிலையில், வளைகுடா நாடுகளிடம் இருந்து கச்சா எண்ணெய்யை கூடுதல் விலைக்கு வாங்கினால் ரிலையன்ஸ் லாபம் குறையக் கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.