கிராமப்புற சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு வட்டி மானியத்துடன் பிணையில்லா கடன்: தமிழ்நாடு அரசு தகவல்
சென்னை: தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கமானது, சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் இணைப்புத் திட்டத்தின் கீழ் கடன் வழங்கி, குழு உறுப்பினர்களின் வாழ்வாதாரம் மேம்பட வாய்ப்புகள் ஏற்படுத்தி வருகிறது. குழுக்களின் தொழில் வளர்ச்சியடையும் போது, தேவைப்படும் கூடுதல் நிதியை சுய உதவிக் குழுக்கள் வங்கிக் கடன் இணைப்பு திட்டத்தின் மூலம் மட்டுமே பூர்த்தி செய்ய இயலாது. இதனைக் கருத்தில் கொண்டு, ஒவ்வொரு சுய உதவிக் குழுவின் பெண் உறுப்பினர்களும், சொந்தமாக தொழில் புரிந்து தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ளவும், தேவைப்படும் கடன் தேவைகளை, வங்கிகளிலிருந்து எளிதில் பெற்றிடவும் உதவிடும் வகையில் பெண்கள் தலைமையிலான தொழில்களுக்கு பிரத்யேக கடன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் நிலையான முதலீடு அல்லது நிலையான முதலீடும், நடைமுறை முதலீடும் இணைந்த இருவகையான கடன்களில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்யலாம். பிணையம் எதுவும் இன்றி ரூ.75,000/- முதல் ரூ.10 லட்சம் வரை, வேளாண் சார்ந்த மற்றும் உணவு பதப்படுத்தும் தொழில்கள், பண்ணை சாரா தொழில்கள், உற்பத்தி, சேவை மற்றும் வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு கடன் உத்தரவாதத் திட்டத்தின் கீழ் கடன் வழங்கப்படுகிறது. வங்கிகள் வழங்கிய கடன் தொகையை தவணை தவறாமல் உரிய காலத்திற்குள் திருப்பிச் செலுத்தும் பெண் தொழில் முனைவோருக்கு 1.5 லட்சம் ரூபாய் வரை நிலுவையில் உள்ள கடன்களுக்கான வட்டியில், 2% மானியமாக வழங்கப்படுகிறது.
சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்காக வங்கிகள் பிரத்யேகமாக இக்கடன் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் இணைந்திருக்கும் சுய உதவிக் குழுவிலுள்ள அனைத்து தகுதியான உறுப்பினர்களும், இத்திட்டத்தின் கீழ் கடன் பெற, அவர்கள் வசிக்கும் பகுதியிலுள்ள ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, வட்டார அளவிலான கூட்டமைப்பு, சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர்கள் அல்லது கணக்கு வைத்திருக்கும் வங்கிக் கிளையை அணுகி விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.