கிராமப்புறங்களில் வணிக உரிமம் கட்டாயம் என்பதை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும்: விக்கிரமராஜா வலியுறுத்தல்
சென்னை: கிராமப்புறங்களில் வணிக உரிமம் கட்டாயம் என்பதை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் என்று விக்கிரமராஜா வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா நேற்று வெளியிட்ட அறிக்கை: அண்மைக்காலமாக சிறு, குறு நடுத்தர வணிகர்கள், வணிக ரீதியில் பல்வேறு பிரச்னைகளுக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறார்கள்.
அதிலும் குறிப்பாக வணிக உரிமக்கட்டண உயர்வு, தொழில்வரி உயர்வு, குப்பைவரி என ஒருபக்கமும், ஜி.எஸ்.டி வரிவிதிப்பு, உணவு பாதுகாப்புச் சட்டம் இவற்றினாலும், புகையிலைப் பொருட்கள் விற்பனை என்ற பெயரில் அரசு அனுமதித்து விற்பனைக்கு கொண்டுவரப்படும் புகையிலை, பொருட்கள், பீடி, சிகரெட்டுகள் விற்பனை செய்வதினால் தவறான வழக்குகள் பதிந்து, சிறு பெட்டிக்கடைக்காரர்கள் கூட அரசு அதிகாரிகளாலும், காவல் துறையினாலும் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இச்சூழலில் நேற்றைய தினம் தமிழக அரசு கிராமப்புற பஞ்சாயத்து பகுதிகளில் உள்ள சிறு,குறு கடைகளுக்குக் கூட உரிமங்கள் கட்டாயம் என அறிவித்திருப்பது மிகப்பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கின்றது. குடும்ப சூழலில் வீட்டோடு சில்லரை வணிகம் செய்துவரும் அடித்தட்டு வணிகர்களையும் இவ்வறிவிப்பு பாதித்துவிடும் என்பதோடு,
அவ்வறிவிப்போடு இணைத்து அறிவிக்கப்பட்டிருக்கின்ற கட்டிட உறுதிச் சான்றிதழ், தீயணைப்புத்துறை உரிமம் என பல்முனை நெருக்கடிகளுக்கு சாதாரண எளிய வணிகரும் எதிர்கொள்ளவேண்டி வரும் என்பதால், தமிழக அரசு இந்த அறிவிப்பை மறுஆய்வு செய்து வணிகர்களின் நிலை கருதியும், சாமான்ய வணிகரின் வாழ்வாதாரம் கருதியும் உடனடியாக திரும்பப்பெற வேண்டுமென வலியுறுத்துகிறேன்.