புதுடெல்லி: அமெரிக்க டாலருக்கு சமமான இந்திய ரூபாய் மதிப்பு 90.43ஆக உள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் கார்கே கூறுகையில்,’2014 க்கு முன்பு, மோடி கூறினார்,’இந்திய ரூபாய் மதிப்பை இழந்ததற்கு காரணம் என்ன, நீங்கள் இதற்கு பதிலளிக்க வேண்டும். நாடு உங்களிடம் இருந்து பதில் கோருகிறது’ என்றார். இன்று, நாங்கள் மோடியிடம் அதே கேள்வியைக் கேட்கிறோம். அவர் பதிலளிக்க வேண்டும். நாங்கள் வளர்ச்சியடைந்து வருகிறோம் என்றும், நமது பொருளாதார நிலைமை நன்றாக இருப்பதாகவும் அவர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர், ஆனால் ரூபாயின் மதிப்பு குறையும் போது உண்மையான பொருளாதார நிலைமை என்ன என்பதை நாம் அறிந்து கொள்கிறோம்’ என்றார்.
காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கூறுகையில்,’ சில ஆண்டுகளுக்கு முன்பு மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில் டாலரின் மதிப்பு அதிகமாக இருந்தபோது, பா.ஜவினர் என்ன சொன்னார்கள்? இப்போது அவர்களின் பதில் என்ன, அவர்களிடம் கேளுங்கள், ஏன் என்னிடம் கேட்கிறீர்கள்’ என்றார். மாநிலங்களவையில் இந்த பிரச்னையை எழுப்பிய காங்கிரஸ் எம்.பி. விவேக் கே. தங்கா,’ ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைந்து வருவது சாமானிய மக்களுக்கு பொருளாதார வலியை ஏற்படுத்தியுள்ளது. ரூபாய் மதிப்பு அமெரிக்க டாலருக்கு 90 ஐத் தாண்டி சரிந்துள்ளது. இந்திய வரலாற்றில் மிகவும் பலவீனமானது’ என்றாா்.

