சென்னை: சென்னையில் இருந்து நேற்று காலை 6 மணிக்கு, ஐதராபாத் செல்லும் தனியார் பயணிகள் விமானம், சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து புறப்பட தயாரானது. விமானத்தில் 74 பயணிகள், 5 விமான ஊழியர்கள் உள்பட 79 பேர் இருந்தனர். விமானம் ஓடுபாதையில் ஓட தொடங்கியபோது இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளதை விமானி கண்டுபிடித்தார்.
இதே நிலையில், விமானம் வானில் பறப்பது ஆபத்தானது என்பதை உணர்ந்த விமானி, உடனடியாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு அவசரமாக தகவல் தெரிவித்துவிட்டு விமானத்தை ஓடு பாதையில் நிறுத்தினார். இதையடுத்து இழுவை வாகனம் மூலம் விமானம் புறப்பட்ட இடத்திற்கு இழுத்து கொண்டு வந்து நிறுத்தப்பட்டது.
அதன்பின் விமான பொறியாளர்கள் விமான இன்ஜின்களை பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் விமானத்தை உடனடியாக பழுது பார்க்க முடியவில்லை. இதனால் பயணிகளை வேறு விமானம் மூலம் ஐதராபாத்திற்கு அனுப்ப ஏற்பாடு நடந்தது. இதனிடையே, விமானத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறை சரிசெய்யப் பட்டது. விமானம் விபத்திலிருந்து தப்பியதோடு 74 பயணிகள், 5 விமான ஊழியர்கள் என 79 பேர் அதிர்ஷ்ட வசமாக தப்பினர். இந்த சம்பவத்தால் இன்று காலை சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.