திருமயம்: மதுரையில் இருந்து திருப்பத்தூர், திருமயம், புதுக்கோட்டை வழியாக தஞ்சாவூருக்கு சுமார் 30 பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பஸ் நேற்று சென்றது. பஸ்சை சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அம்பேத்கர் நகரை சேர்ந்த கண்ணன் மகன் பாலமுருகன் (48) ஓட்டி சென்றார். இந்நிலையில் திருச்சி-காரைக்குடி பைபாஸ் சாலையில் திருமயத்தை அடுத்து உள்ள லெம்பலக்குடி டோல்கேட் அருகே பஸ் சென்றபோது டிரைவர் பாலமுருகனுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் சுதாரித்து கொண்ட டிரைவர் பஸ்சை சாலையோரம் நிறுத்தியுள்ளார்.
இதனை தொடர்ந்து டோல்கேட் ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு உடனே வந்த ஆம்புலன்ஸ் மாரடைப்பு ஏற்பட்ட டிரைவர் பாலமுருகனை மீட்டு திருமயம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட டிரைவர் பாலமுருகன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து நமணசமுத்திரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.