Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆளும் பாஜக கூட்டணியில் இருந்து விலகல்; 3 மாஜி எம்எல்ஏக்கள் காங்கிரசில் ஐக்கியம்: அசாம் பேரவை தேர்தலுக்கு முன் திருப்பம்

கவுகாத்தி: ஆளும் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளில் இருந்து விலகிய மூன்று முன்னாள் எம்எல்ஏக்கள் காங்கிரஸில் இணைந்தது, அசாம் மாநில அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அசாம் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவின் நெருங்கிய ஆதரவாளராகக் கருதப்பட்ட சிபாஜார் தொகுதி முன்னாள் எம்எல்ஏ பினந்தா சைகியா, கடந்த 3ம் தேதி பாஜகவில் இருந்து விலகினார். பாஜக தனது தேசியவாதக் கொள்கைகளைக் கைவிட்டு விட்டதாகவும், ஜல் ஜீவன் திட்டத்தில் பெருமளவிலான ஊழல் நடப்பதாகவும், மதரீதியான பதற்றங்களைத் தூண்டுவதாகவும் அவர் கடுமையாகக் குற்றம் சாட்டினார்.

அதே நாளில், அசாம் கண பரிஷத் கட்சியின் மூத்த தலைவரான சத்யபிரதா கலிதாவும் தனது பதவியை ராஜினாமா செய்தார். அக்கட்சி, பாஜகவின் கிளை அமைப்பாகச் செயல்படுவதாகவும், உள்கட்சி ஜனநாயகம் முற்றிலுமாக இல்லை என்றும் அவர் வேதனை தெரிவித்தார். இவர்களைத் தொடர்ந்து, மேற்கு கர்பி ஆங்லாங் மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு முறை எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்ட மான்சிங் ரோங்பி, கடந்த 6ம் தேதி பாஜகவில் இருந்து விலகினார். பழைய பாஜக இப்போது இல்லை என்றும், புதியதாகக் கட்சியில் இணைந்தவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, தங்களைப் போன்ற மூத்த தலைவர்கள் ஓரம் கட்டப்படுவதாகவும் அவர் தனது ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

ஆளும் கூட்டணியில் இருந்து அடுத்தடுத்து விலகிய இந்த மூன்று முக்கியத் தலைவர்களும், நேற்று கவுகாத்தியில் நடைபெற்ற விழாவில் தங்களைக் காங்கிரஸில் முறைப்படி இணைத்துக் கொண்டனர். வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளில் இருந்து அதிருப்தியில் உள்ள தலைவர்களை இழுப்பதன் மூலம், தனது கட்சியை வலுப்படுத்த காங்கிரஸ் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

இதுகுறித்து காங்கிரஸ் அமைப்புப் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறுகையில், கடந்த சில ஆண்டுகளாக அசாம் மக்கள், மாநில வரலாற்றிலேயே மிகவும் ஊழல் மலிந்த ஒரு ஆட்சியைத்தான் கண்டுள்ளனர். முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவால் தனியார் நிறுவனம் போல இந்த அரசு நடத்தப்படுகிறது. கட்டுப்பாடற்ற ஊழல், பொது வளங்களைச் சூறையாடுதல் மற்றும் பிரித்தாளும் ஆட்சி ஆகியவைதான் இந்த அரசின் அடையாளமாக உள்ளது’ என்று குற்றம்சாட்டினார்.