Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

நாகர்கோவிலில் விபத்துகளை தவிர்க்க 4 சந்திப்புகளில் ரப்பர் வேகத்தடைகள்: எஸ்.பி. ஸ்டாலின் அதிரடி நடவடிக்கை

நாகர்கோவில்: நாகர்கோவிலில் 4 இடங்களில் விபத்துகளை தவிர்க்க ரப்பர் வேகத்தடைகள் அமைக்க எஸ்.பி. ஸ்டாலின் நடவடிக்ைக மேற்கொண்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளுக்குள் நாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதிவேகத் திறன் கொண்ட பைக்குகள், சொகுசு கார்கள், அதிவேக டாரஸ் லாரிகள், போக்குவரத்து விதிகளை மீறி செல்வதால், விபத்துகளின் எண்ணிக்கையும், உயிர் பலியும் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்கள் முன்பு மார்த்தாண்டம் மேம்பாலத்தில் திடீரென தடம் மாறி வேகமாக வந்த சொகுசு கார் மோதி, எதிரே பைக்கில் வந்த அண்ணன் தங்கை பரிதாபமாக தூக்கி வீசப்பட்டு, பாலத்தின் அடிப்பகுதியில் உள்ள வீட்டு காம்பவுண்ட் சுவரில் விழுந்து பரிதாபமாக பலியானார்கள். தற்போதும், டாரஸ் லாரிகள், சில அரசு பஸ் டிரைவர்கள் சாலையில் முந்தி செல்லும் வாகனங்களுக்கு இடம் தராமல் செல்வதுடன், பின்னால் இருந்து வாகனம் முந்தும் போது, திடீரென சாலையின் வலது பக்கம் வாகனத்தை திருப்புவதாலும், விபத்துகள் ஏற்பட்டு உயிர் பலியாகி வருகின்றன.

அதிவேக பைக்குகளில் சாலையில் அதி பயங்கர வேகத்தில் வரும் இளைஞர்களாலும், சாலையில் நடந்து செல்லும் அப்பாவி மக்களும் பலியாகும் நிலை உள்ளது. இந்தநிலையில், சாலை விபத்தகளை தவிர்க்க எஸ்.பி ஸ்டாலின் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். அதன்படி விபத்து பகுதிகளை ஆய்வு செய்து. அங்கு மீண்டும் விபத்துகள் எற்படாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார். இதற்காக சாலை விதிகளை மீறுவோர் மீது வழக்குகள் பதியப்பட்டு வருகின்றன. சிறுவர்கள் பைக் ஒட்டினால், அவர்களது பெற்றோர் மீது வழக்கு பதியப்பட்டு வருகிறது. இதற்கிடையே நகரப்பகுதிகளில் விபத்துகளை தவிர்க்க, முதல் கட்டமாக நாகர்கோவில் கலெக்டர் அலுவலக ரவுண்டனா சந்திப்பு, வேட்டாளி அம்மன் கோயில் சந்திப்பு, பால்பண்ணை சந்திப்பு, கோட்டாறு அரசு ஆயுர் வேத மருத்து கல்லூரி ஆகிய 4 சந்திப்புகளில் ரப்பர் டயரிலான சிறிய வேகத்தடைகள், போக்குவரத்து போலீசார் மூலம் அமைக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக கலெக்டர் அலுவலக ரவுண்டானாவில், வாகனங்கள் 4 திசைகளிலும் செல்வதால், எந்த வாகனம் எந்த திசையில் செல்வது என்று தெரியாமல், விபத்து எற்படும் நிலை இருந்தது. தற்போது இங்கு வேகத்தடை காரணமாக வாகனங்கள் மெதுவாக செல்வதால், இனிமேல் விபத்தகளுக்கான வாய்ப்பு குறைவு. இதுபோல், மாவட்டம் முழுவதும் படிப்படியாக ரப்பர் வேகத்தடைகள் அமைக்க நெடுஞ்சாலைத்துறையும் முடிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

3 மடங்கு வழக்குகள் அதிகரிப்பு

இதுபற்றி எஸ்.பி. ஸ்டாலின் கூறியதாவது: கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துகளுக்கு சாலை விதிகளை மீறுவது முக்கிய காரணமாக உள்ளது. எனவே சாலை விதிகளை மீறுவோர் மீது அதிக அளவிலான வழக்குகள் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது. முக்கிய சந்திப்புகளில் போலீசார், போக்குவரத்தை ஒழுங்கு செய்வதுடன், சாலை விதிகளை மீறுவோர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. கடந்தாண்டை விட இந்தாண்டு இதுவரை 3 மடங்கு அதிக போக்குவரத்து விதிமீறல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இதுதவிர மாணவர்கள் மட்டுமின்றி பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த மாலை வேளையில் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

குளச்சல் மணவாளக்குறிச்சி சாலை, மார்த்தாண்டம் மேம்பாலம் உள்பட விபத்துகள் அதிகம் நேரிடும் சாலைகளில்,

விபத்தகளை கட்டுப்படுத்த நெடுஞ்சாலைத்துறையுடன் இணைந்து ரிபௌக்சன் ஸ்டிக்கர் (பிரதிபலிப்பான்) மின்கம்பங்கள், மரங்களில் அமைக்கப்பட்டு வருகின்றன. இதனால், மின்கம்பங்கள், மரங்களில் மோதுவது குறையும். இது தவிர அதிக விபத்துகள் ஏற்படும் பகுதிகளில் எச்சரிக்கை பலகைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. நாகர்கோவிலை தொடர்ந்து கன்னியாகுமரி, தக்கலை, மார்த்தாண்டம போன்ற இதர நகரப்பகுதிகளிலும் ரப்பர் வேகத்தடைகள் அமைக்கப்படும். வாகனம் ஓட்டும் இளைஞர்கள் மட்டுமின்றி அவர்களது பெற்றோர்களும், தங்கள் குழந்தைகளுக்கு வாகனங்களை ஒட்ட தராமல் இருப்பதுடன், மெதுவாக சாலை விதிகளை பின்பற்றி செல்வதன் அவசியத்தை எடுத்துரைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.