கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்னை, வாழை, ரப்பர், நெல் ஆகியவைதான் பிரதான சாகுபடிப் பயிர்கள். இதுதவிர மலையோரப் பகுதியில் உள்ள விவசாயிகள் நல்லமிளகு, ஜாதிக்காய், கிராம்பு உள்ளிட்ட நறுமணப் பயிர்களை சாகுபடி செய்கிறார்கள். மா, பலா, அன்னாசி உள்ளிட்ட பழ மரங்களையும் விரும்பி பயிரிடுகிறார்கள். மாவட்டத்தின் மேற்கு பகுதியில் ரப்பர் விவசாயம் மிகுதியாக நடந்து வருகிறது. இந்த ரப்பர் தோட்டங்களில் பலவிதமான ஊடுபயிர்களையும் சாகுபடி செய்து கூடுதல் வருவாய் பெறுகிறார்கள். இந்நிலையில் நாகர்கோவில் ஜோஸ்வா தெருவை சேர்ந்த செல்வின்ராய் என்ற ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் தனக்கு சொந்தமான ரப்பர் தோட்டத்தில் ஊடுபயிராக காப்பிச்செடியை சாகுபடி செய்து அசத்தி வருகிறார். சுருளக்கோடு அருகே உள்ள கஞ்சிக்குழியில் அமைந்திருக்கும் செல்வின்ராயின் ரப்பர் தோட்டத்திற்கு ஒரு அதிகாலை வேளையில் சென்றோம். நம்மை வரவேற்ற செல்வின்ராய் தமது ரப்பர் மற்றும் காப்பி விவசாயம் குறித்து பகிர்ந்துகொண்டார்.
``வேர்கிளம்பி அருகே உள்ள கல்லங்குழிதான் எங்களுக்கு சொந்த ஊர். கஞ்சிக்குழி கிராமத்தில் எங்கள் குடும்பத்திற்கு சொந்தமாக இருந்த விவசாய நிலத்தை எனக்கும் எனது சகோதரர்களுக்கு பங்கிட்டுக் கொடுத்தார் எங்கள் தந்தை. எனக்கு அதில் 5 ஏக்கர் ரப்பர் தோட்டம் கிடைத்தது. நான் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் ஊழியராக பணியாற்றியதால் நாகர்கோவிலில் குடும்பத்துடன் குடியேற வேண்டியதாகிவிட்டது. எனது மனைவி நிர்மலா ராய் நாகர்கோவிலில் உள்ள ஒரு கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றிருக்கிறார். எனது மகன் ஜெபர்சன் அரசு மருத்துவமனையில் டாக்டராகவும், மகள் ஹோட்லி திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பேராசிரியராகவும் வேலை பார்க்கிறார்கள்.
வங்கிப்பணியில் இருந்து நான் ஓய்வு பெற்ற பிறகு எனது ரப்பர் தோட்டத்தைக் கவனிக்கத் தொடங்கினேன். அப்போது ரப்பர் தோட்டத்தில் ஏதாவது ஊடுபயிர் செய்யலாம் என நினைத்தேன். ஆனால் மற்ற விவசாயிகள் செய்வது போல் வாழை பயிரிடாமல் வேறு எதையாவது பயிரிடலாமே என யோசித்தேன். அப்போது கேரள மாநிலம் வயநாட்டைச் சேர்ந்த ராய் ஆன்றனி என்பவரின் அறிமுகம் கிடைத்தது. அவர் விவசாயப் பயிர்கள் தொடர்பாக பல ஆராய்ச்சி செய்து பலவிதமான பயிர்களை உற்பத்தி செய்துள்ளார். அவரிடம் பேசும்போது ரப்பர் தோட்டத்தில் ஊடுபயிராக காப்பி வளர்க்கலாம் என ஆலோசனை தந்தார்.உடனே நான் காப்பியை பயிரிடவில்லை. எனது ரப்பர் தோட்டத்தில் உள்ள மண் காப்பி சாகுபடிக்கு ஏற்றது தானா? என்று அறிய மண் பரிசோதனை செய்தேன். ஆய்வின் முடிவில் காப்பி வளர்க்கலாம் என தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து ராய் ஆன்றனியிடம் இருந்து `அரபிகா’ எனும் ரகத்தைச் சேர்ந்த ரக காப்பிக் கன்றுகளை ரூ.20 என்ற விலையில் வாங்கினேன்.
மொத்தம் 7 ஆயிரம் காப்பிக் கன்றுகளை வாங்கி எனக்கு சொந்தமான ரப்பர் தோட்டத்தில் ஊடுபயிராக சாகுபடி செய்தேன். தற்போது அனைத்து காப்பிச் செடிகளும் நன்றாக வளர்ந்துள்ளன. ரப்பர் தோட்டத்திற்குள் காப்பிச் செடிகளை வளர்ப்பதால் 3 அடி உயரத்திற்கு வந்ததும் செடிகளை கவாத்து செய்கிறேன். காப்பிச் செடிகளை ராய் ஆன்றனி கொடுக்கும்போது 3 வருடத்தில் இதில் இருந்து மகசூல் எடுக்கலாம் என தெரிவித்தார். இந்தக் காப்பிச் செடிகளை சாகுபடி செய்து இரண்டரை வருடம் ஆகிறது. தற்போது ஒரு சில செடிகளில் இருந்து காப்பிக்கொட்டைகள் கிடைக்க ஆரம்பித்திருக்கிறது. இன்னும் 6 மாதத்தில் அனைத்து காப்பி செடிகளும் பூத்து காய்க்கத் தொடங்கிவிடும். இங்கு சுமார் 1500 ரப்பர் மரங்கள் உள்ளன. ரப்பர் மரங்களுக்கு இடையே காப்பி செடிகளை நட்ட இடங்களைத் தவிர மற்ற இடங்களில் 700 கமுகு (பாக்கு) மரம் நட்டிருக்கிறேன். ரப்பர் மரங்களுக்கு அடிப்பகுதியில் நல்லமிளகு பயிர்களையும் சாகுபடி செய்திருக்கிறேன்.
எனது தோட்டத்தின் உள்பகுதியில் மலைக்குன்றும் அமைந்திருக்கிறது. அந்த மலையின் கீழ்ப்பகுதியில் இயற்கையான நீர்ஊற்று ஒன்று இருந்தது. அந்த இடத்தில் 10 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டி பண்ணைக்குட்டை போல் மாற்றி இருக்கிறேன். இந்தப் பண்ணைக்குட்டையில் வருடம் முழுவதும் தண்ணீர் இருக்கிறது. இந்த நீரைக் கொண்டு அனைத்து பயிர்களுக்கும் பாய்ச்சும் வகையில் சொட்டுநீர்ப் பாசன வசதி செய்திருக்கிறேன். வேளாண்மை பொறியியல் துறை அதிகாரிகள் லதா, சரண்யா மற்றும் தோட்டக்கலை அதிகாரிகள் தயாசிங், பிரதீப் ஆகியோர் இதற்கான உதவிகளை செய்தனர். இவர்களின் உதவியால் எனக்கு மானியமும் கிடைத்தது. சொட்டுநீர்ப் பாசன வசதிக்கு மின்வசதி இல்லாததால் தோட்டக்கலைத்துறை சார்பில் சோலார் பேனலை மானியத்தில் வைத்து கொடுத்திருக்கிறார்கள். இதன்மூலம் தினமும் அனைத்து பயிர்களுக்கும் தண்ணீர் பாய்ச்சுகிறேன். ஓய்வுபெற்ற வேளாண்மை அதிகாரி எட்வர்ட் தலைமையிலான குழுவினர் எனது தோட்டத்திற்கு அடிக்கடி வந்து சில ஆலோசனைகளை சொல்லித் தருகிறார்கள்.
ரப்பர் மரங்களுக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பு கலப்பு உரம் வைப்பேன். தற்போது எனது நிலத்தில் உள்ள 1500 ரப்பர் மரங்களில் 500 மரங் களில் இருந்து ரப்பர் பால் வெட்டப்படுகிறது. காப்பிச் செடிகளுக்கு கடலைப்புண்ணாக்கு, வேப்பம்புண்ணாக்கு, உலர்ந்த மாட்டுச்சாணம் ஆகியவற்றை இருமுறை உரமாக வைப்பேன். இதுதவிர காப்பிச் செடிகளுக்கு இருமுறை பூச்சிமருந்து அடிப்பேன். நல்லமிளகு செடிகளுக்கு உலர்ந்த மாட்டுச்சாணத்தை உரமாக வைப்பேன். மேலும் தேவையான பராமரிப்பு பணிகளைச் செய்கிறேன்’’ என்கிறார்.
தொடர்புக்கு:
செல்வின்ராய் - 94433 29223.


