கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரதான தொழில் விவசாயம்தான். இங்கு அரசுப்பணியில் இருப்பவர்களின் எண்ணிக்கை மிக அதிகம். வேலை இல்லாத பலர் படித்து முடித்த கையோடு வெளிநாடுகளுக்கு சென்று தங்களுக்கு தெரிந்த தொழிலைச் செய்து பொருள் ஈட்டுகிறார்கள். அந்தப் பணத்தைத் தங்கள் ஊருக்குக் கொண்டு வந்து இங்கு ஏதாவது ஒரு தொழிலைத் தொடங்குகிறார்கள். அந்த வரிசையில் மஸ்கட் நாட்டில் பல வருடங்கள் வேலை பார்த்த, செம்பருத்திவிளை பகுதியைச் சேர்ந்த கிறிஸ்டோபர் அருள்ராஜ் என்பவர் சொந்த ஊருக்கு திரும்பி விவசாயத் தொழிலைத் தேர்ந்தெடுத்து அதில் முத்திரை பதித்து வருகிறார். பெருஞ்சிலம்பு அருகே கலையன்குணம் பகுதியில் உள்ள தனது ரப்பர் தோட்டத்தில் நேந்திரன் வாழையைப் பயிரிட்டு முத்தான விளைச்சலை ஈட்டி வரும் கிறிஸ்டோபர் அருள்ராஜைச் சந்தித்து பேசினோம். `பாரம்பரிய விவசாயக் குடும்பம்தான். ஆனால் சில காரணங்களால் விவசாயத்தைத் தொடர முடியவில்லை. இதற்கிடையே படிப்பு முடிந்தவுடன் சரியான வேலை எதுவும் கிடைக்காததால் மஸ்கட் நாட்டுக்கு வேலைக்குச் சென்றேன்.அங்கு 25 வருட காலமாக கார் மெக்கானிக்காக வேலை பார்த்தேன். விடுமுறை கிடைக்கும்போது ஊருக்கு வந்து செல்வேன். ஊரிலேயே இருந்து நமக்குப் பிடித்த விவசாயத் தொழிலை செய்துகொண்டு குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று அடிக்கடி நினைப்பேன். கடந்த 2019ம் ஆண்டு மஸ்கெட்டில் இருந்து ஊர் திரும்பிய நேரத்தில் கொரோனா தொற்று பரவியது. அதன்பிறகு வெளிநாடு செல்ல முடியாத நிலை உருவானது. வயதும் கடந்து விட்டது. இனி வெளிநாட்டிற்கு செல்ல வேண்டாம், நமது விருப்பம் போல் விவசாயம் பார்க்கலாம் என முடிவு செய்தேன்.
அதன்படி எங்கள் ஊரில் இருந்து சில கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பெருஞ்சிலம்பு பகுதியில் ஒன்றரை ஏக்கர் ரப்பர் தோட்டத்தை விலைக்கு வாங்கினேன். சிறிது காலம் அதில் ரப்பர் பால் வெட்டினேன். ரப்பர் தோட்டத்தில் மரங்கள் அனைத்தும் முதிர்ச்சியாக இருந்தன. அதனால் ரப்பர் மரங்களை வெட்டி அகற்றிவிட்டு, அதில் மீண்டும் புதிதாக ரப்பர் மரம் வைக்க முடிவு செய்தேன். இதற்காக ரப்பர் மரங்களை வெட்டி அகற்றுபவர்களிடம் கொடுத்தேன். அவர்கள் இரண்டு வருட காலம் அந்த மரத்தில் இருந்து பால் வெட்டி எடுத்து விட்டு, அதன்பிறகு மரங்களை வெட்டி அகற்றித் தந்தனர். அவர்கள் 2 வருடங்கள் ரப்பர் பால் எடுத்துக்கொண்டதற்காக எனக்கு ரூ.6 லட்சத்து 25 ஆயிரம் கொடுத்தனர். பின்னர் எனது நிலத்தை பண்படுத்தி விட்டு, 375 ரப்பர் மரக் கன்றுகளை நட்டேன். தற்போது அவை ஒன்றே கால் வயதில் உள்ளன. ரப்பர் மரத்தில் 7 வருடத்தில் இருந்து பால் கிடைக்க ஆரம்பிக்கும். அதில் இருந்து நமக்கு வருமானம் கிடைக்கும்.
ரப்பர் மரக்கன்றுகளை நடவு செய்து பராமரிக்கும் நேரத்தில், அவற்றுக்கு இடையே ஊடுபயிர் சாகுபடி செய்ய முடிவு செய்தேன். குமரி மாவட்டத்தில் நேந்திரம் வாழை அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்த மாவட்டத்தின் தேவைக்கு போக அதிகளவிலான பழங்கள் கேரள மாநிலத்திற்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. அதேபோல் நேந்திரம் பழம் மற்றும் நேந்திரம் காய்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்யும் தொழிலும் குமரி மாவட்டத்தில் அதிகளவில் நடக்கிறது. இதனால் நேந்திரம் பழம் மற்றும் காய்களுக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இதனால் நாமும் நேந்திரம் வாழை சாகுபடி செய்யலாம் என முடிவு செய்து, ரப்பருக்கு ஊடுபயிராக 850 நேந்திரம் வாழைகக்கன்றுகளை வாங்கி நட்டேன்.
இதுதவிர கமுகு (பாக்கு மரம்), காய் கறிகள், சிறுகிழங்கு, அன்னாசிப்பழம், மரவள்ளிக்கிழங்கு ஆகியவற்றையும் சாகுபடி செய்திருக்கிறேன். இதில் மரவள்ளிக் கிழங்கை அறுவடை செய்து விற்பனை செய்ததோடு, எனது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் கொடுத்தேன். நிலத்தைச் சுற்றி கம்பிவேலி அமைத்திருக்கிறேன். எங்கள் நிலம் சாலையில் இருந்து சிறிது தூரத்தில் உள்ளதால், நிலத்திற்கு வாகனம் செல்லும் வகையில் பாதை அமைத்திருக்கிறேன். அந்தப் பாதையில் வாகனம் செல்லும் இடத்தைத் தவிர, பாதையின் ஓரத்தில் 25 செவ்வாழை, 25 ரசகதளி வாழை வைத்திருக்கிறேன். நேந்திரம் வாழையை நடவு செய்த 10வது மாதத்தில் அறுவடை தொடங்கிவிடும். தற்போது நான் சாகுபடி செய்துள்ள அனைத்து வாழையிலும் குலைகள் தள்ளிவிட்டது. இன்னும் ஒரு மாத காலம் கடந்தபிறகு அறுவடைப்பணி தொடங்கிவிடும்.
வாழை, ரப்பர் உள்ளிட்ட அனைத்துப் பயிர்களுக்கும் பாசனம் செய்வதற்காக நிலத்தில் கிணறு வெட்டி வைத்திருக்கிறேன். இதில் வரும் தண்ணீர் வளமான தண்ணீராக இருக்கிறது. இது அனைத்து பயிர்களுக்கும் போதுமானதாகவும் இருக்கிறது. தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த சொட்டுநீர்ப் பாசன அமைப்பை நிறுவி இருக்கிறேன். இதற்கு தோட்டக்கலைத்துறை மானியம் கூட வழங்கி இருக்கிறது. பயிர்களுக்கான உரங்கள், மருந்துகளை வைப்பதற்காக தோட்டத்திலேயே ஒரு கட்டடத்தையும் கட்டி வைத்திருக்கிறேன். நான் தினமும் காலை 7 மணிக்கு தோட்டத்திற்கு வந்து விடுவேன். என்னால் முடிந்த அனைத்து வேலைகளையும் செய்து முடிப்பேன். பின்பு மதியம் 1 மணிக்கு வீட்டிற்கு செல்வேன். மீண்டும் மாலை 4 மணிக்கு தோட்டத்திற்கு வந்து இரவு வரை வேலை செய்துவிட்டு செல்வேன். ஒரு நபரால் செய்ய முடியாத வேலையை மட்டுமே வேறு தொழிலாளிகளை வைத்து செய்வேன்’’ என்றார்.
(இதன் தொடர்ச்சி அடுத்த இதழில் இடம்பெறும்)
தொடர்புக்கு:
கிறிஸ்டோபர் அருள்ராஜ்.
94432 72926.
நானோ களைக்கொல்லிக்கு காப்புரிமை!
கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் நானோ தாவரவியல் களைக்கொல்லி கண்டுபிடிப்பிற்கான காப்புரிமையை இந்திய அரசின் காப்புரிமை அலுவலகத்தின் மூலம் சமீபத்தில் பெற்றுள்ளது. இந்த நானோ களைக்கொல்லி முனைவர் ஸ்வாதிகா, முனைவர் சுப்பிரமணியன் மற்றும் முனைவர் மாரிமுத்து ஆகியோரால் கண்டுபிடிக்கப்பட்டது.இந்த காப்புரிமையானது வேளாண் நானோ தொழில்நுட்ப மையத்தில் முனைவர் பட்டம் பெற்ற மாணவி நடத்திய ஆராய்ச்சியின் அடிப்படையில் ஒரு புதிய களைக்கொல்லியை இயற்கை தாவர ரசாயனங்களில் இருந்து உருவாக்கியதன் மூலம் பெறப்பட்டது. அல்லெலோபதி கலவைகள் என்று அழைக்கப்படும் இந்த ரசாயனங்கள், யூகலிப்டஸ் சிட்ரியோடோராவில் இருந்து பிரித்தெடுக்கப்பட்டன. இது அருகில் உள்ள தாவரங்களின் வளர்ச்சியை இயற்கையாகவே அடக்கும் வல்லமை கொண்டது. கொத்தவரையில் இருந்து எடுக்கப்பட்ட பிசினைப் பயன்படுத்தி இந்த நானோ களைக்கொல்லி தயாரிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு தயாரிக்கப்பட்ட நானோ-களைக்கொல்லி களைச்செடியின் விதைகள் முளைப்பதற்கு முன்னும், களைச்செடி முளைத்த பின்னும் கட்டுப்படுத்துகிறது.இந்த களைக்கொல்லியை 1000 பிபிஎம் என்ற அளவில் நெல் வயல்களில் காணப்படும் மிக முக்கிய களைச்செடியான குதிரைவாலி புற்களில் பயன் படுத்தியபோது அவற்றின் விதைகள் முளைப்பதற்கு முன்னும், முளைத்த பின்னும் வெற்றிகரமாக கட்டுப்படுத்தியது தெரியவந்தது.