ஆர்டிஇ மாணவர் சேர்க்கை விவரங்களை சமர்ப்பிக்க தனியார் பள்ளிகளுக்கு விதிக்கப்பட்ட காலக்கெடு அக்டோபர் 31-ம் தேதி வரை நீட்டிப்பு!!
சென்னை: கல்வி உரிமைச் சட்டத்தின் 25 சதவீத இட ஒதுக்கீட்டில், சேர்க்கப்பட்ட மாணவர்களின் விவரங்களை சமர்ப்பிக்க தனியார் பள்ளிகளுக்கு விதிக்கப்பட்ட காலக்கெடுவை அக்டோபர் 31-ம் தேதி வரை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கல்வி உரிமைச் சட்டத்தின் படி தனியார் பள்ளிகள் 25 சதவீத இடங்களை ஏழை மாணவர்களைக் கொண்டு நிரப்ப வேண்டும். இந்நிலையில், 25 சதவீத இட ஒதுக்கீட்டில் சேர்க்கப்பட்ட மாணவர்களின் விவரங்களை அக்டோபர் 17-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என தனியார் பள்ளிகள் இயக்குநர் சுற்றறிக்கை வெளியிட்டார்.
இந்த சுற்றறிக்கையை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு தனியார் பள்ளிகள் முன்னேற்ற சங்கம், தமிழ்நாடு தனியார் பள்ளிகள் தாளாளர்கள் நலச் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களில், கல்விக் கட்டணத்தை திருப்பி வழங்கும் வகையில் மட்டுமே இந்த சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய நீதிபதி, மாணவர்களின் விவரங்களை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசத்தை அக்டோபர் 17-ம் தேதியிலிருந்து அக்டோபர் 31-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார். அதேசமயம் புதிதாக எந்த மாணவர் சேர்க்கையும் மேற்கொள்ளக்கூடாது என்றும் உத்தரவிட்ட நீதிபதி வழக்கை முடித்து வைத்தார்.