ஆர்எஸ்எஸ்சுக்கு எதிராக பேசினால் சாலையில் நடக்க முடியாது: மல்லிகார்ஜுன கார்கேவுக்கு பாஜ எம்.பி மிரட்டல்
பெங்களூரு: பெங்களூருவில் உள்ள பாஜ அலுவலகத்தில் பாஜ எம்.பி கார்ஜோள் நேற்று அளித்த பேட்டியில், ‘உண்மையான தேச பற்றுக்கு உதாரணமாக செயல்படும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும், அவரது மகனும் அமைச்சருமான பிரியாங்க் கார்கேவும் கீழ்தரமாக விமர்சனம் செய்து வருகிறார்கள். நீங்கள் எதிர்க்க வேண்டியது ஆர்எஸ்எஸ் அமைப்பை அல்ல பாஜவை.
நீங்கள் எதிர்க்க வேண்டியது மோகன் பகவத்தை அல்ல. பிரதமர் மோடியை. அதை செய்யாமல் ஆர்எஸ்எஸ் அமைப்பை எதிர்ப்பது என்ன நியாயம். சோனியா, ராகுல்காந்தியை திருப்திப்படுத்த ஆர்எஸ்எஸ் இயக்கத்தை எதிர்த்து பேசி வருகிறார்கள். உங்களின் போக்கை நாட்டு மக்கள் ஏற்று கொள்ள மாட்டார்கள். ஆர்எஸ்எஸ் அமைப்பில் சாதி வேற்றுமை கிடையாது. இந்த உன்னதமான இயக்கத்தை கீழ்தரமாக விமர்சனம் செய்தால், சாலையில் நடமாட முடியாது. நாட்டு மக்கள் உங்களுக்கு சரியான பாடம் கற்று கொடுப்பார்கள்’ என்றார்.