பெங்களூரு: ஆர்எஸ்எஸ் அமைப்பை தடை செய்ய வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே சில தினங்களுக்கு முன் தெரிவித்திருந்தார். இதற்கு ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பதிலளித்துள்ளார். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடந்த ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சி ஒன்றில் மோகன் பகவத் கலந்து கொண்டார். அப்போது, “ஆர்எஸ்எஸ் கடந்த 1925ல் நிறுவப்பட்டது.
பிரிட்டிஷ் அரசாங்கத்தில் நாங்கள் பதிவு செய்திருக்க வேண்டும் என விரும்புகிறீர்களா? சுதந்திரத்துக்கு பிறகு இந்திய அரசு பதிவை கட்டாயமாக்கவில்லை. நாங்கள் தனிநபர்களின் அமைப்பாக வகைப்படுத்தப்பட்டுள்ளோம். வருமான வரித்துறையும், நீதிமன்றங்களும் ஆர்எஸ்எஸ்சை தனிநபர்களின் அமைப்பாக அங்கீகரித்து வருமான வரி செலுத்துவதிலிருந்து விலக்கு அளித்துள்ளது. ஆர்எஸ்எஸ் மூன்று முறை தடை செய்யப்பட்டுள்ளது.
அந்த வகையில், அரசாங்கம் எங்களை அங்கீகரித்துள்ளது. நாட்டில் பதிவு செய்யப்படாத பல விஷயங்கள் உள்ளன. இந்து தர்மம் கூட பதிவு செய்யப்படவில்லை. எங்கள் அமைப்பு எந்தவொரு அரசியல் கட்சியையும் ஆதரிக்காது. அயோத்தியில் ராமர் கோவில் கட்ட காங்கிரஸ் முன்வந்திருந்தால் அந்த கட்சியை கூட நாங்கள் ஆதரித்து இருப்போம்” என்றார்.

