ஆர்எஸ்எஸ் பாடலைப் பாடிய விவகாரம்.. காந்தி குடும்பம்தான் எனது கடவுள்: கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் பேட்டி!!
பெங்களூரு: யாருடைய மனதையாவது புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்க தயார் என்று கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார். கர்நாடக சட்டப்பேரவையில் கடந்த 21ம் தேதி பெங்களூரு நெரிசல் மரணங்கள் தொடர்பான விவாதம் நடைபெற்றது. அப்போது துணை முதல்வர் டி.கே.சிவகுமார் பேசுகையில், ‘‘நமஸ்தே சதா வத்சலே மாத்ருபூமே” என்ற ஆர்எஸ்எஸ் அமைப்பின் பாடலை பாடினார்.
கர்நாடக சட்டப்பேரவையில் ஆர்எஸ்எஸ் பாடலை அம்மாநில துணை முதல்வர் டி.கே.சிவகுமார் பாடியது சர்ச்சையான நிலையில், கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்; "காங்கிரஸ்காரனாகப் பிறந்த நான், ஒரு காங்கிரஸ்காரனாகவே இறப்பேன். காங்கிரஸ், காந்தி குடும்பத்தின் மீதான எனது விசுவாசத்தை யாராலும் கேள்வி கேட்க முடியாது. ஆர்எஸ்எஸ்-ஐ புகழ்வது எனது நோக்கமல்ல. எனது செயல் யாரையேனும் புண்படுத்தி இருந்தால் அதற்காக வருந்துகிறேன். அவர்களிடம் மன்னிப்பு கோருகிறேன்.
ஆனால், இதை அரசியல் அழுத்தம் காரணமாக செய்யவில்லை. எனது கட்சியின் சகாக்கள் சிலர் இது தொடர்பாக வெளிப்படுத்திய கருத்தினை நான் விரும்பவில்லை. காந்தி குடும்பம்தான் எனது கடவுள். நான் அவர்களின் பக்தன். காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உடன் எனது பயணம் மிகவும் நீண்டது. 100 காங்கிரஸ் பவனை நிறுவ உள்ளோம். அது எங்கள் கட்சியின் கோயில். நான் எனது கட்சியின் வரலாற்றில் நிலைத்திருக்க விரும்புகிறேன். காங்கிரஸ் கட்சிக்காக எல்லோரும் இணைந்து பணியாற்றுவோம்” என அவர் கூறியுள்ளார்.