Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ரூ.1 லட்சம் கட்டினால் 4 லட்சம் தருவதாக ஆசை வார்த்தை கூறி 1930 பேரிடம் ரூ.87 கோடி மோசடி

திருவள்ளூர்: ஒரு லட்சம் கட்டினால் ரூ.4 லட்சம் வழங்கப்படும் என ஆசை வார்த்தை கூறி திருவள்ளூர் மாவட்டத்தில் 1930 பேரிடம் ரூ.87 கோடி வரை மோசடி செய்ததாக பாதிக்கப்பட்டவர்கள் எஸ்பி அலுவலகத்தில் புகார் செய்தனர். சென்னையில் ஸ்வர்ணதாரா குழுமம் என்ற பெயரில் நிதி நிறுவனம் கடந்த 2015ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன் கவர்ச்சிகரமான விளம்பரத்தை நம்பி ஏராளமானோர் பணத்தை முதலீடு செய்துள்ளனர். 2015 முதல் 2018 வரை வட்டி பணத்தை திருப்பி தந்துள்ளனர்.

இதையடுத்து திருவள்ளூர் மாவட்டத்தில் 2019ம் ஆண்டு முதல் ஸ்வர்ணதாரா குழுமத்திற்கு திருவள்ளூரை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியரான பாண்டுரங்கன் (76) என்பவரை கூட்டாளியாகவும், அவரது மனைவி வசந்தி, மகள் பவானி, மகன்கள் மணிவண்ணன், சரவணன் ஆகியோரை புரோக்கர்களாகவும் கொண்டு திருவள்ளூர், பெரம்பலூர், சென்னை, அரியலூர், வேலூர் மற்றும் பிற மாவட்டங்களில் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் என கிட்டத்தட்ட 1930 பேரிடமிருந்து ரூ.87 கோடி வரை வசூல் செய்துள்ளனர்.

2019 முதல் 2021 வரை அறிவித்தபடி பணத்தை திருப்பி வழங்கினர். 3 ஆண்டுகளுக்கு பிறகு வட்டி பணத்தை திருப்பி தராமல் அலைக்கழித்துள்ளனர். இதுகுறித்து பாண்டுரங்கனிடம் பணம் செலுத்தியவர்கள் கேட்டபோது, ‘நீங்கள் செலுத்திய பணத்தை ஸ்வர்ணதாரா நிதி நிறுவனத்தில் செலுத்தியதாகவும் அவர்கள் தரவில்லை’ என்றும் தெரிவித்தனர். அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். உடனே சென்னை மத்திய குற்ற பிரிவு போலீசில் கடந்த மே மாதம் கொடுத்தனர். அதன் பேரில் அந்நிறுவனத்தின் இயக்குனர் வெங்கடரங்க குப்தா, அவரது மனைவி கவிதா சக்தி, இயக்குனர்கள் ஹரிஹரன், விஜயஸ்ரீ குப்தா, அவர்களது மகள் பிரதீஷா குப்தா, ஜெய் சந்தோஷ், ஜெய் விக்னேஷ் ஆகிய 7 பேரை கைது செய்தனர்.

இந்நிலையில் பாண்டுரங்கனை மட்டும் நம்பி 25 பேர் ஏஜென்ட்டுகளாக செயல்பட்டு 1930 நபர்களிடமிருந்து ரூ.87 கோடி வரை முதலீடு செய்த பணத்தை தராமல் ஏமாற்றியதாக திருவள்ளூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் நேற்று புகார் அளித்தனர். அதில், பணத்தை ஸ்வர்ணதாரா நிதி குழுமத்தில் பாண்டுரங்கன், அவரது மனைவி வசந்தி, மகள் பவானி, மகன்கள் மணிவண்ணன், சரவணன் ஆகியோர் செலுத்தினார்களா என்பது சந்தேகமாக இருப்பதாகவும், அவர்கள் கோடிக்கணக்கில் கமிஷன் பெற்றிருப்பதை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தனர். அதன் மீது விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர்.