மும்பை: ரூ.5,817 கோடி மதிப்பிலான ரூ.2,000 நோட்டுகள் திரும்பப் பெறப்படவில்லை என இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. பொதுமக்களிடம் புழக்கத்தில் உள்ள ரூ.2,000 நோட்டுகள் திரும்ப பெறப்படுவதாக 2023 மே 19ஆம் தேதி ரிசர்வ் வங்கி அறிவித்தது. 2023அக்டோபர் 7 வரை வங்கிகள் மூலம் ரூ.2,000 நோட்டுகளை பொதுமக்கள் மாற்றிக்கொள்ளலாம் என தெரிவித்தது. அதனை தொடர்ந்து ரிசர்வ் வங்கி அலுவலகங்கள் மூலம் ரூ.2,000 நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், ரூ.3.56 லட்சம் கோடி மதிப்பிலான ரூ.2,000 நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாகவும், ரூ.5,817 கோடி மதிப்புள்ள ரூ.2,000 நோட்டுகள் ரிசர்வ் வங்கிக்கு திரும்பவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் 31 வரை 98.37% சதவீதம் ரூ.2 ஆயிரம் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ரூ.2 ஆயிரம் நோட்டு சட்டப்படி அதன் மதிப்பை இழக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
