Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் கப்பலூர் சுங்கச்சாவடி முற்றுகை: போலீசார் பேச்சுவார்த்தை

மதுரை: திருமங்கலம் அருகே கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றக் கோரி 300-க்கும் மேற்பட்டோர் போராட்டம் நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூரில் அமைந்துள்ள ஒன்றிய அரசின் சுங்கச்சாவடி கடந்த 2011ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. இச்சுங்கச் சாவடி, நகராட்சி பகுதியில் இருந்து ஐந்து கிலோ மீட்டருக்கு தொலைவில் அமைக்க வேண்டும் என்பது விதிமுறை, ஆனால் விதிமுறை மீறி இரண்டு கிலோமீட்டர் தொலைவிலேயே சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இதனை அகற்ற வேண்டும் என இப்பகுதி மக்கள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வருகின்றனர்.

இந்தச் சூழலில் கட்டணம் வசூலிப்பதிலும் சுங்கச்சாவடி நிர்வாகம் அடிக்கடி உள்ளூர் மக்களிடம் பிரச்சினையில் ஈடுபட்டு வருகிறது. இதனால் மறியல், உண்ணாவிரதம் என தொடர்ந்து பல்வேறு வடிவங்களில் போராட்டங்கள் நடக்கிறது. இதனிடையே இன்று முதல் உள்ளூர் வாகன ஓட்டிகளுக்கு மாதந்தோறும் ரூ. 340 கட்டணம் வசூலிக்கப்பட்ட உள்ளது. உள்ளூர் வாகன ஓட்டிகளுக்கு 50% கட்டணம் வசூலிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 300-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சுங்கக் கட்டணம் வசூலிக்கும் கவுண்ட்டர் முன் அமர்ந்து திருமங்கலம், கல்லுப்பட்டி, பேரையூர் வாகன ஓட்டிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கப்பலூர் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள உள்ளூர் மக்களுக்கு அதிமுக சார்பில் ஆதரவு வழங்கப்பட்டது. போராட்டத்திற்கு அதிமுக எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் நேரில் ஆதரவளித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் 300-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கப்பலூர் சுங்கச்சாவடியில் உள்ள 10 கவுண்ட்டர்களையும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருவதால் பரபரப்பு நிலவி வருகிறது.

விதிகளை மீறி அமைக்கப்பட்டுள்ள கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும் என முழக்கம் எழுப்பி வருகின்றனர். உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கக் கூடாது என்றும் வலியுறுத்தி போராட்டக்காரர்கள் முழக்கம் எழுப்புகின்றனர். தொடர்ந்து ஆர்.பி.உதயகுமாரிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.