சென்னை: எல்ஐசி, ஆர்பிஎல் வங்கியுடன் நிதி காப்பீட்டு ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்மூலம், ஆர்பிஎல் வங்கியின் வாடிக்கையாளர்கள், வங்கியின் கிளைகள், வலைதளம் மற்றும் டிஜிட்டல் சேனல்கள் மூலம் எல்ஐசியின் பல்வேறு ஆயுள் காப்பீட்டு திட்டங்களை பெறமுடியும். எல்ஐசி தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் மேலாண்மை இயக்குநர் ஆர்.துரைசாமி மற்றும் ஆர்பிஎல் வங்கியின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக இயக்குநர் ஆர்.சுப்பிரமணிய குமார் மற்றும் எல்ஐசி மற்றும் ஆர்பிஎல் வங்கியின் பிற மூத்த அதிகாரிகள் முன்னிலையில் இதற்கான ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம், ஆர்பிஎல் வங்கி வாடிக்கையாளர்கள், எல்ஐசியின் டெர்ம் இன்ஷ்யூரன்ஸ், எண்டோவ்மென்ட், பென்ஷன் மற்றும் பங்குசந்தை சார்ந்த திட்டங்கள் போன்ற பல்வேறு காப்பீட்டு திட்டங்களை எளிதில் பெற முடியும். எல்ஐசியின் 3600க்கும் மேற்பட்ட கிளைகள் மற்றும் துணை அலுவலகங்கள் மற்றும் ஆர்பிஎல் வங்கியின் கிட்டத்தட்ட 570 கிளைகள் மற்றும் 1474 வணிக தொடர்பு கிளைகள் (இவற்றில் 297 வங்கி சேவை விற்பனை நிலையங்களும் அடங்கும்) ஆகியவற்றின் வலிமையான ஒருங்கிணைப்பின் மூலம் நாடு முழுவதும் ஆயுள்காப்பீட்டு சேவை ஊடுருவல் எளிதாக்கப்படும்.
மேலும் இது “2047க்குள் அனைவருக்கும் காப்பீடு” என்ற தொலைநோக்கு பார்வையை நோக்கி துரிதமாகச் செல்ல உதவும். இந்த ஒப்பந்தத்தின் மூலம், இரு நிறுவனங்களின் நோக்கமான சேமிப்பை ஊக்குவித்தல் மற்றும் இந்தியா முழுவதும் சிறந்த காப்பீடு வழங்குதல் ஆகியவை மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.