Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ராயபுரம் மண்டலத்தில் அனைத்து வளர்ச்சி திட்ட பணிகளும் ஜனவரி மாதத்திற்குள் முடிக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு அமைச்சர் சேகர்பாபு அறிவுறுத்தல்

சென்னை: துறைமுகம் சட்டமன்ற தொகுதி, ராயபுரம் மண்டலத்தில் நடந்து வரும் அனைத்து வளர்ச்சித் திட்டப் பணிகளையும் வரும் ஜனவரி மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்று அமைச்சர் சேகர்பாபு அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். துறைமுகம் சட்டமன்ற தொகுதி, ராயபுரம் மண்டலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்து வளர்ச்சித் திட்டப் பணிகளின் முன்னேற்றங்கள் குறித்தும் மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் ராயபுரம் மண்டல அலுவலக கூட்டரங்கில் நேற்று நடந்தது.

அறநிலையத்துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான சேகர்பாபு தலைமை வகித்தார்.  பின்னர் துறைமுகம் சட்டமன்ற தொகுதியில் ராயபுரம் மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் கழிவுநீரகற்று வாரியம், பெருநகர சென்னை வளர்ச்சிக் குழுமம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் கீழ் நடந்து வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் பணி ஒப்பந்தம் கோரப்பட்டு தொடக்க நிலையில் உள்ள பணிகளின் தற்போதைய நிலை குறித்து விரிவாக தொடர்புடைய துறை அலுவலர்களிடம் ஆலோசனை நடத்தி அனைத்துப் பணிகளும் வரும் ஜனவரி மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

மேலும், வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ். மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைப் பணிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரசின் சேவைகள் குறித்தும் தொடர்புடைய துறை அலுவலர்களிடம் விரிவாக ஆய்வு மேற்கொண்டு பொதுமக்கள் அன்றாட பயன்படுத்தக் கூடிய வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு முன்னுரிமை அளித்து பணிகளை விரைவில் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்று உத்தரவிட்டார்.