இரவில் மூடப்பட்ட ராயப்பேட்டை பீட்டர்ஸ் மேம்பாலத்தில் தடையை மீறி நடந்த பைக் ரேஸ் கல்லூரி மாணவன், வியாபாரி பலி: மற்றொரு வாலிபர் லேசான காயம்
சென்னை: இரவில் மூடப்பட்ட ராயப்பேட்டை பீட்டர்ஸ் மேம்பாலத்தில் தடையை மீறி நடந்த பைக் ரேஸில் எதிரே வந்த பைக் மீது நேருக்கு நேர் மோதிய விபத்தில், சம்பவ இடத்திலேயே கல்லூரி மாணவன், கவரிங் நகை வியாபாரி உடல் சிதறி உயிரிழந்தனர். சென்னை பெருநகர காவல் எல்லையில் நள்ளிரவில் நடைபெறும் பைக் ரேஸ் மற்றும் குற்றச்சம்பவங்களை தடுக்கும் வகையில் சென்னை முழுவதும் உள்ள மேம்பாலங்கள் இரவு 10 மணிக்கு மேல் தடுப்புகள் அமைத்து மூடப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் ராயப்பேட்டை பீட்டர்ஸ் மேம்பாலம் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு போலீசாரால் தடுப்புகள் அமைத்து மூடப்பட்டது. அந்த நேரத்தில் வாலிபர்கள் சிலர் திடீரென அண்ணா சாலையில் இருந்து ராயப்பேட்டை நோக்கி பீட்டர்ஸ் சாலை வழியாக பைக் ரேஸில் ஈடுபட்டனர். மேம்பாலத்தில் வைக்கப்பட்டிருந்த தடுப்புகளை சற்று அகற்றிவிட்டு மின்னல் வேகத்தில் பாய்ந்தனர். அப்போது ராயப்பேட்டையை சேர்ந்த கவரிங் நகை வியாபாரி குமரன் என்பவர், தனது வீட்டில் இருந்து விமான நிலையத்திற்கு ஹெல்மெட் அணிந்து கொண்டு பைக்கில் அண்ணா சாலை நோக்கி சென்றார்.
மேம்பாலத்தின் தடுப்பு சற்று விலகி இருந்ததால் அவரும் தடுப்புகளை தாண்டி மேம்பாலத்தில் சென்றுள்ளார். அப்போது, மேம்பாலத்தின் எதிர் திசையில் மின்னல் வேகத்தில் 2 பைக்குகளில் வாலிபர்கள் வந்தனர். ரேஸில் ஈடுபட்டபோது முன்னால் சென்ற மற்றொரு வாலிபரை முந்த முயன்ற வாலிபரின் பைக், குமரன் சென்ற பைக் மீது உரசியது. இதில் நிலை தடுமாறி 2 பைக்குகளும், வேகத்தின் காரணமாக கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.
இதில், எதிர் திசையில் வந்த குமரன் என்பவரின் பைக் மீது ரேஸில் ஈடுபட்ட வாலிபரின் பைக் பயங்கர வேகத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் குமரன் மற்றும் வாலிபர் ஆகியோர் தூக்கி வீசப்பட்டு படுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். மற்றொருவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். பின்னர், 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வந்து பரிசோதித்ததில் 2 பேரும் உயிரிழந்துவிட்டதாக கூறினர்.
அதைதொடர்ந்து காயமடைந்த மற்றொரு வாலிபரை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் விபத்து தொடர்பாக தகவல் அறிந்து விரைந்து வந்த அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், உயிரிழந்த 2 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அதில், விபத்தில் உயிரிழந்த குமரன் (45) தி.நகர் ராமசாமி சாலையில் கவரிங் நகைகள் விற்பனை கடை நடத்தி வருவதும், அவருக்கு மனைவி ராஜவேணி, சுஷ்மா (17) மற்றும் லட்சிதா (7) என 2 மகள்கள் உள்ளதும் தெரியவந்தது. உயிரிழந்த மற்றொருவர் ராயப்பேட்டை பேகம் சாகிப் தெருவை சேர்ந்த சையத் சர்தார் பாஷா (19) என்றும், இவர் தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வருவதும் தெரியவந்தது. இவர் தனது நண்பர் முகமது ஜோயல் (23) என்பவருடன் பைக் ரேஸில் ஈடுபட்ட போது விபத்து நடந்தது விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
