திண்டுக்கல்: மதுரையை சேர்ந்த பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம் மீது சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் சிலைமான் காவல் நிலையத்தில் கடந்த 2012ல் கொலை முயற்சி மற்றும் சட்டவிரோதமாக ஆயுதம் வைத்திருந்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து வரிச்சியூர் செல்வம் தனது கூட்டாளிகளான கேரளாவை சேர்ந்த சினோஜ், அஜிஸ், வர்கீஸ் ஆகியோருடன் திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே உள்ள லாட்ஜில் மறைந்திருந்தார்.
இதையறிந்த சிலைமான் போலீசார் கடந்த 12.03.2012ல் அவர்களை கைது செய்வதற்காக திண்டுக்கல் வந்தனர். அப்போது, வரிச்சியூர் செல்வம் தரப்புக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் கேரளாவை சேர்ந்த சினோஜ் உயிரிழந்தார். இந்த வழக்கு திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றம் ஜேஎம் 2ல் நடைபெற்று வருகிறது. இதில் வரிச்சியூர் செல்வம் தொடர்ந்து ஆஜராகாமல் டிமிக்கி கொடுத்து வந்தார்.
இதையடுத்து நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது. எனவே திண்டுக்கல் போலீசார் அவரை தேடி வந்தனர். இந்நிலையில் வத்தலக்குண்டு பகுதியில் வரிச்சியூர் செல்வம் பதுங்கியிருப்பதாக நேற்று தகவல் கிடைத்தது. அங்கு சென்ற திண்டுக்கல் வடக்கு போலீசார் வரிச்சியூர் செல்வத்தை கைது செய்தனர். அவரை மாவட்ட நீதிமன்றம் ஜே.எம் 2ல் ஆஜர்படுத்தினர். நீதிபதி அக்.3 வரை வரிச்சியூர் செல்வத்தை சிறையிலடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து, வரிச்சியூர் செல்வம் சிறையில் அடைக்கப்பட்டார்.