தண்டையார்பேட்டை: புதுவண்ணாரப்பேட்டையில் யார் பெரிய ரவுடி என்பதில் ஏற்பட்ட தகராறில், ரவுடியை அடித்து கொன்ற கூட்டாளிகள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். புதுவண்ணாரப்பேட்டை வெங்கடேசன் தெருவை சேர்ந்தவர் மனோஜ் குமார் (எ) மாயாண்டி (20). இவர் மீது அடிதடி, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. இவர், நேற்று முன்தினம் இரவு புதுவண்ணாரப்பேட்டை வீரராகவன் தெருவில் தலையில் பலத்த காயத்துடன் மயங்கி கிடந்தார்.
அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மனோஜ்குமார் உயிரிழந்தார். தகவலறிந்த புது வண்ணாரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அதில், மனோஜ் குமார், தனது கூட்டாளிகளான புது வண்ணாரப்பேட்டை வெங்கடேசன் தெருவை சேர்ந்த சஞ்சை (எ) குல்லா (22), தனபால் நகரை சேர்ந்த தேவபிரசாத் (எ) தேவா (22). ஏ.இ.கோயில் தெருவை சேர்ந்த பிரகாஷ் (எ) அய்யாவு ஆகியோருடன் மது அருந்தியதும், அப்போது யார் பெரிய ரவுடி என்பதில் அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில், இவரது கூட்டாளிகள் சேர்ந்து பீர் பாட்டிலால் மனோஜ்குமார் தலையில் அடித்துவிட்டு தப்பிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.