கருவடிக்குப்பம் சாராயக்கடையில் பயங்கரம் பெட்ஷாப் ஊழியர் தலையில் கல்லை போட்டு கொல்ல முயன்ற ரவுடி கைது
புதுச்சேரி : புதுச்சேரி கருவடிக்குப்பம் சாராயக்கடையில் பெட்ஷாப் ஊழியரின் தலையில் கல்லை போட்டு கொல்ல முயன்ற ரவுடியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.புதுச்சேரி கருவடிக்குப்பம் சாராயக்கடையில் நேற்று மாலை ஒருவர் இறந்து கிடப்பதாக லாஸ்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது ஒருவரின் தலையில் காணிக்கல் போடப்பட்டு, ரத்தவெள்ளத்தில் கிடந்துள்ளார். உடனே போலீசார் அவரை மீட்டு புதுச்சேரி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளித்த போது அவருக்கு உயிர் இருப்பதும், மதுபோதையில் மயக்கத்தில் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அவர் கோட்டக்குப்பம் பகுதியை சேர்ந்த வெசூத் அகமது (31) என தெரியவந்தது. இவர் அங்குள்ள ஒரு பறவைகள் விற்பனை கடையில் (பெட்ஷாப்) வேலை செய்து வருகிறார்.
இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இதனால் இவர் மதுபோதைக்கு அடிமையாகி தினமும் மது அருந்தி வந்துள்ளார். இந்நிலையில் இவர் நேற்று காலை கருவடிக்குப்பம் சாராயக்கடையில் மது அருந்த வந்துள்ளார். காலை முதல் மாலை வரை அங்கேயே மது அருந்திவிட்டு கீழே விழுந்து கிடந்துள்ளார்.
இதனிடையே பெரியார் நகரை சேர்ந்த ரவுடி எழிலன் (30) என்பவர் மதுகுடிக்க சாராயக்கடைக்கு வந்துள்ளார். பிறகு அவர் மது அருந்திவிட்டு வரும் போது மதுபோதையில் கிடந்த வெசூத் அகமது கால் எழிலன் மீது பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரத்தில் அருகில் கிடந்த காணிக்கல்லை எடுத்து வெசூத் அகமது தலையில் போட்டுவிட்டு எழிலன் சென்றுள்ளார். உடனே வெசூத் அகமத் தலையில் இருந்து ரத்தம் பீறிட்டு வந்தவுடன், அங்கிருந்த குடிமகன்கள் பதற்றம் அடைந்து அலறியடித்து வெளியே ஓடியுள்ளனர்.
இச்சம்பவத்தை தொடர்ந்து சாராயக்கடை பூட்டப்பட்டதால் குடிமகன்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். மேற்கொண்டு விசாரணையில் எழிலன் மீது ஏற்கனவே கொலை, கொலை முயற்சி, அடிதடி உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதும், மதுபோதையில் வெசூத் அகமதை கொல்ல முயன்றதும் தெரியவந்தது. இதுசம்பந்தமாக லாஸ்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து எழிலனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.