கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் ஆனைக்கட்டி கிராம பழங்குடியின விவசாயிகளுக்கு ரோஸ்மேரி நாற்றுகள்
*தோட்டக்கலைத்துறை மூலம் வழங்கல்
ஊட்டி : தோட்டக்கலைத்துறை சார்பில் ரூ.32 ஆயிரத்து 500 மதிப்பில் ஆனைக்கட்டி கிராமத்தை சேர்ந்த பழங்குடியின விவசாயிகளுக்கு ரோஸ்மேரி நாற்றுகளும், மசினகுடியை சேர்ந்த விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகளும் வழங்கப்பட்டன.தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் ஒரு பிரதான தோட்டக்கலை மாவட்டமாகும். பயிர் சாகுபடியிலும், சீதோஷண நிலையிலும் அண்டை மாவட்டங்களைக் காட்டிலும் பெருமளவு வேறுபட்டது.
நீலகிரி மாவட்டத்தில் நிலவக்கூடிய தட்பவெட்பநிலை பல்வேறு பயிர்கள் சாகுபடிக்கு உகந்ததாக உள்ளது. முறையே காய்கறிகள், பழங்கள், வாசனை திரவிய பயிர்கள், மலர்கள், மருத்துவ பயிர்கள் மற்றும் மலைத் தோட்டப்பயிர்கள் ஆகியவை படிமட்டங்கள் மற்றும் சில கிரமங்களில் குறுகிய சரிவான பரப்பில் சாகுபடி செய்யப்படுகின்றன. மலையின் உயரமான பரப்பில் உருளைக்கிழங்கு, முட்டை கோஸ், கேரட், பீன்ஸ், பிளம், பீச், பேரி மற்றும் இதர வகை பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. மலையின் இடைப்பட்ட பகுதிகளில் கமலா ஆரஞ்சு, காப்பி சாகுபடி செய்யப்படுகிறது.
குறைந்த உயரப்பகுதிகளான கூடலூர், பந்தலூர் பகுதிகளில் கிராம்பு, ஜாதிக்காய், மிளகு, இஞ்சி, தென்னை உள்ளிட்டவைகள் பயிரிடப்பட்டு வருகின்றன. தோட்டக்கலை பயிரான மலை காய்கறிகள் நீலகிரி மாவட்டத்தில் ஆண்டிற்கு நீர்போகம், கார்போகம் மற்றும் கடை போகம் என மூன்று பருவங்களாக சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 55 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் தேயிலை விவசாயம் ேமற்கொள்ளப்படுகிறது. சுமார் 7 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் மலை காய்கறி விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது.
தோட்டக்கலைத்துறை மூலம் காய்கறி விவசாய பணிகளுக்கு பல்வேறு மானிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, ஊட்டி வட்டார தோட்டக்கலைத்துறை சார்பில் நடப்பு ஆண்டில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி இயக்க திட்டத்தின் கீழ் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திடும் வகையில், ஆனைக்கட்டி கிராமத்தை சேர்ந்த 19 பழங்குடியின விவசாயிகளுக்கு ரோஸ்மேரி நாற்றுகள் முழுவதும் இலவசமாக வழங்கப்பட்டது.
அவற்றை விவசாயிகள் நன்கு வளர்த்த பின் தரமான ரோஸ்ேமரியை சந்தைப்படுத்த விற்பனைக்கான வாய்ப்புகளையும் ஏற்படுத்தி தர தோட்டக்கலைத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இதேபோல், மசினகுடி சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த இதர விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டது. இவற்றின் மதிப்பு ரூ.32 ஆயிரத்து 500 ஆகும்.இது குறித்து தோட்டக்கலை உதவி இயக்குநர் பைசல் கூறியதாவது:
தோட்டக்கலைத்துறை சார்பில் விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி இயக்க திட்டத்தில் மசினகுடி கிராம விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டது.
ஆனைக்கட்டி கிராம பழங்குடியின மக்களுக்கு ரோஸ்மேரி நாற்றுகள் வழங்கப்பட்டது. இதேபோல் திருச்சிக்கடி பழங்குடியின விவசாயிகளுக்கும் ரோஸ்மேரி உள்ளிட்ட நாற்றுகள் வழங்கப்பட உள்ளது.இவ்வாறு அவர் கூறியுள்ளார். இந்நிகழ்வில் தோட்டக்கலை அலுவலர் ெஜயக்குமார், உதவி அலுவலர் மணிகண்டன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.