மும்பை: பிசிசிஐ-யின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம் வரும் 22ம் தேதி இணைய வாயிலாக நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் 2024-25 சீசனுக்கான (அக்டோபர் 2024 முதல் செப்டம்பர் 2025 வரை) வீரர்களின் ஒப்பந்தம் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இதில் தான் ரோஹித் மற்றும் கோஹ்லியின் ஒப்பந்த மாற்றம் குறித்த அதிர்ச்சிகர முடிவு எடுக்கப்படவுள்ளதாக தெரிகிறது. எதற்காக இந்த திடீர் முடிவு என சமூக வலைதளத்தில் ரசிகர்கள் பலரும் விவாதித்து வருகின்றனர். ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி வரும் ரோஹித் சர்மா மற்றும் விராத் கோஹ்லி ஆகியோர் டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டனர். பிசிசிஐ விதிகள் மற்றும் நடைமுறைப்படி, கிரிக்கெட்டின் மூன்று வடிவங்களிலும் (டெஸ்ட், ஒருநாள், டி20) விளையாடும் வீரர்களுக்கு மட்டுமே மிக உயரிய ‘ஏ பிளஸ்’ ஒப்பந்தம் வழங்கப்படும்.
அந்தவகையில் ரோஹித் மற்றும் கோஹ்லி ஆகியோர் ஒரே ஒரு வடிவத்தில் மட்டுமே விளையாடி வருவதால், அவர்களை ‘ஏ பிளஸ்’ பிரிவில் தக்கவைப்பது சரியாக இருக்காது என்று பிசிசிஐ கருதுகிறது. இதனால் அவர்கள் ‘ஏ’ கிரேட் அல்லது அதற்குக் கீழான பிரிவுக்கு மாற்றப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. மேலும் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கேப்டனாக இருக்கும் சுப்மன் கில், மூன்று வடிவங்களிலும் அதிக போட்டிகளில் விளையாடி வருவதால், அவரை ‘ஏ’ பிரிவில் இருந்து ‘ஏ பிளஸ்’ பிரிவு ஒப்பந்தத்துக்கு உயர்த்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி ரோஹித் சர்மா, விராத் கோஹ்லி, ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் ‘ஏ பிளஸ்’ பிரிவில் உள்ளனர். இதில் பும்ரா மற்றும் ஜடேஜா ஆகியோர் தொடர்ந்து அதே இடத்தில் நீடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களுடன் சுப்மன் கில் புதிதாக இணையக்கூடும்.
இந்தக் கூட்டத்தில் ரோஹித், கோஹ்லி விவகாரம் மட்டுமின்றி, மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கான ஊதிய ஒப்பந்தம் மற்றும் உள்ளூர் போட்டிகளில் பணியாற்றும் நடுவர்களுக்கான ஊதிய உயர்வு குறித்தும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன. 2025ல் அதிக ரன் பட்டியல் ரோஹித் மற்றும் கோஹ்லி இடம் பிடித்திருக்கும் அதே வேளையில், இந்திய கிரிக்கெட்டிற்காக அவர்கள் அதிகளவில் பங்களித்ததற்காக அவர்களுக்கு விலக்கு அளிக்கப்படும் என்று ஒரு தரப்பினர் கூறுகின்றன. இன்னும் சிலர் விதிகளின்படி கிரேடு கண்டிப்பாக குறைக்கப்படும் என்றும் கூறுகின்றனர். என்னவானாலும் இந்த முடிவு டிசம்பர் 22ம் தேதி தெரிந்துவிடும்.


