லண்டன்: மறைந்த ராக் இசை பாடகர் டேவிட் போவியுடன் தனக்கு இருந்த உறவு குறித்து, 50 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபல பாப் பாடகி லூலு முதன்முறையாக வெளிப்படையாகப் பேசியுள்ளார். பிரபல பாப் பாடகியான லூலு (76), கடந்த 1970ம் ஆண்டுகளில் புகழ்பெற்ற மற்றும் மறைந்த ராக் இசை நட்சத்திரமான டேவிட் போவியுடன் ஏற்பட்ட நட்பு மற்றும் காதல் உறவு குறித்துப் பலமுறை பேசியிருந்தாலும், அவர்களுக்குள் இருந்த உடல் ரீதியான தொடர்பு குறித்து இதுவரை வெளிப்படுத்தாமல் இருந்தார்.
இந்த நிலையில் 1974ம் ஆண்டு டேவிட் போவியின் புகழ்பெற்ற பாடலான ‘தி மேன் ஹூ சோல்டு தி வேர்ல்ட்’ என்ற பாடலை மீண்டும் பாடி லூலு வெளியிட்டார். அந்தப் பாடலுக்கு டேவிட் போவியே இசையமைத்துப் பாடியிருந்தார். அந்தக் காலகட்டத்தில் இருவருக்கும் இடையே நெருங்கிய உறவு இருந்ததாகக் கூறப்பட்டது. சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் இதுகுறித்து முதன்முறையாக வெளிப்படையாகப் பேசியுள்ள லூலு, ‘டேவிட் போவியுடன் உடலுறவு கொண்டேன் என்பதை இதுவரை நான் சொன்னதே இல்லை.
இதுவே முதல் முறையாக சொல்கிறேன். எங்கள் இருவருக்கும் ஏற்பட்ட உறவு வெறும் உடலுறவைத் தாண்டியது. அது ஆழமான புரிதலைக் கொண்டது. அவர் என்னைப் புரிந்து கொண்டதை உணர்ந்தேன். ஆனால், போவியின் போதைப்பொருள் பழக்கம் மற்றும் விசித்திரமான வாழ்க்கை முறை காரணமாக அவருடனான உறவிலிருந்து விலகினேன்’ என்றும் தெரிவித்துள்ளார். கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்குப் பிறகு லூலு வெளியிட்டுள்ள இந்தத் தகவல், இசை உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.