Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

2 வருடமாக சிக்காமலிருந்த கொள்ளையர்கள் 2 பேர் கைது: 85 சவரன் நகை பறிமுதல்

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே கடந்த 2 வருடமாக விவசாயி உள்ளிட்ட பல்வேறு வீடுகளில் கொள்ளையில் ஈடுபட்டு வந்த இருவர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து 85 சவரன் நகை, பணம் மற்றும் பைக் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஊத்துக்கோட்டை அருகே பெரம்பூர் கிராமத்தில் வசித்து வருபவர் மணிகண்டன்(30). வேன் டிரைவர் மற்றும் விவசாயமும் செய்து வருகிறார். கடந்த 22ம் தேதி இவர் இல்லாத போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு 5 சவரன் நகைகள், 900 கிராம் வெள்ளி, ரூ.2 லட்சம் ரொக்கம், வீட்டின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக் ஆகியவை திருடு போனது. இது குறித்து மணிகண்டன் ஊத்துக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

இந்த சம்பவம் குறித்து திருவள்ளூர் எஸ்பி. சீனிவாச பெருமாள் உத்தரவின் பேரில் ஊத்துக்கோட்டை டிஎஸ்பி கணேஷ்குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஏழுமலை, குற்றபிரிவு எஸ்.ஐ. சக்திவேல், சிறப்பு எஸ்.ஐக்கள் ராவ் பகதூர், செல்வராஜ், ராஜன், மந்திரசேகர், அருணகிரி ஆகியோர் கொண்ட தனி படை அமைக்கப்பட்டு கொள்ளையர்களை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், பெரம்பூர் கிராமத்தில் பைக் ஒன்று யாரும் கேட்பாரற்று நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

போலீசார் அதனை மீட்டு அது யாருடைய பைக் என விசாரித்தனர். அதன் பிறகு சுமார் 50க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா காட்சிகள் மூலம் ஆய்வு செய்தனர். அப்போது கனகம்மா சத்திரம் அருகே தோமூர் கிராமத்தை சேர்ந்த பிரபாகரன்(37) என்பவரை நேற்றுமுன்தினம் ஒரு தோட்டத்தில் வைத்து சுற்றி வளைத்து பிடித்தனர். அப்போது அவரிடம் நடத்திய விசாரணையில், தனது கூட்டாளியான பூண்டியை சேர்ந்த கேசவன்(35) என்பவனுடன், சேர்ந்து திருடியதை ஒப்புக்கொண்டார்.

இதனை அடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் பெரம்பூர் கிராமம் மட்டுமல்ல கடந்த 2 வருடமாக ஊத்துக்கோட்டை, பென்னாலூர் பேட்டை வெங்கல் ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட 13 இடங்களில் பூட்டிய வீடுகளில் நகைகளை கொள்ளையடித்தது தெரிந்தது.

மேலும், இவர்கள் விவசாயி மணிகண்டன் வீட்டில் கொள்ளை அடித்து சென்றபோது இவர்கள் வந்த பைக் பழுதானதால் அதை அங்கேயே விட்டுவிட்டு அங்கு நிறுத்தி வைத்திருந்த விவசாயின் பைக்கை எடுத்து கொண்டு அங்கிருந்து சென்றதும் தெரிய வந்தது. மேலும் அவர்கள் கொள்ளையடித்து வீட்டில் வைத்திருந்த 85 சவரன் தங்க நகைகள் மற்றும் 900 கிராம் வெள்ளி, ஒரு பைக்கையும், ரூ.2 லட்சம் பணம் பறிமுதல் செய்தனர். பின்னர், இருவரையும் நேற்று ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

* கொள்ளையடித்த பணத்தில் சொகுசு வாழ்க்கை

தோமூரை சேர்ந்த பிரபாகரன் மீது 8 திருட்டு வழக்குகளும், பென்னாலூர் பேட்டையில் ஒரு கள்ள தொடர்பால் ஏற்பட்ட ஒரு கொலை வழக்கும் உள்ளது. வீடுகளில் கொள்ளையடிக்கும் பணத்தை வைத்து சொகுசாக வாழ்ந்து வந்துள்ளான். மேலும், திருடிய நகைகளை சினிமாவில் வருவதுபோல தங்க கட்டிகளாக உருக்கி அதை கட்டிலுக்கு கீழேயும், ஏர் கூலரிலும் ஒலித்து வைப்பதும் தெரியவந்தது.

அதுவும் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அதிக அளவு கொள்ளையடித்ததால் அந்த பணத்தில் மாங்காய் தோப்பு ஒன்று குத்தகைக்கு வாங்கி வியாபாரம் செய்தும் வந்துள்ளான். கடந்த 8 வருடங்களுக்கு முன்பு ஆந்திராவில் கொள்ளையடித்த நகைகள் 100 சவரனை ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இந்த திருட்டுக்கு உடந்தையாக அவனது கூட்டாளி பூண்டியை சேர்ந்த கேசவன் உடனிருந்துள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது.