ஈரோடு : தீபாவளிக்கு இன்னும் ஒருவாரம் உள்ள நிலையில் ஈரோடு சாலையோர ஜவுளிக்கடையில் விற்பனை விறுவிறுபாக நடைபெற்றது. தீபாவளி பண்டிகை வரும் 20ம் தேதி கொண்டாடப்படும் நிலையில், கடந்த ஒரு வாரமாக, ஈரோடு கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.
ஈரோட்டிற்கு பிற மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் அதிகளவில் குவிந்துள்ளனர். இதனால் மொத்த வியாபாரம் அதிகளவில் நடந்தது. மேலும், வெளி மாவட்ட வியாபாரிகள் போட்டி போட்டு துணிகளை வாங்கிச்செல்வதால் வியாபாரிகல் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில், நேற்று சாலையோர ஜவுளி கடைகளில், சாலையை தெரியாத அளவுக்கு மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. காலை முதல் மாலை வரை இருந்த கூட்டத்தை விட இரவு நேரத்தில், ஈரோடு ஆர்கேவி ரோடு, நேதாஜி சாலை, மணிக்கூண்டு, ஈஸ்வரன் கோயில் வீதி, திருவேங்கடசாமி வீதிகளில் மக்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது.
குறிப்பாக, சாலையோரமாக குறைந்த விலையில் சட்டை, சேலை, குழந்தைகளுக்கான துணிகள் குவித்து வைத்தும், வடமாநில வியாபாரிகள் சிலர் கடை வீதிகளுக்குள் குழந்தைகளுக்கான ஆடைகளை கைகளில் சுமந்தபடி விற்பனை செய்தனர்.