மாதவரம்: சென்னை முழுவதும் சுமார் 22,000 மாடுகள் சாலைகளில் திரிந்து கொண்டிருப்பதாக மாநகராட்சி கணக்கு தெரிவிக்கிறது. இந்த மாடுகள் வாகன விபத்துகளுக்கு காரணமாவதுடன், போக்குவரத்துக்கும் பெரிய தொந்தரவாக உள்ளன. அவற்றை மீட்டு பராமரிப்பு மையங்களில் விட சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுக்க உள்ளது. சென்னையில் தற்போது 3 மாடு பராமரிப்பு மையங்கள் செயல்படுகின்றன. ராயபுரம் மண்டலம் - 350 மாடுகள் (தினமும் ஒரு மாட்டுக்கு ரூ.10 கட்டணம்). திருவொற்றியூர் மண்டலம் - 40 மாடுகள். மாதவரம் மண்டலம் - 100 மாடுகள்.
மாநகராட்சி விரைவில் 14 புதிய மாடு பராமரிப்பு மையங்களை திறக்க உள்ளது. இவை சென்னையின் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்படும். இதன் மூலம் சாலைகளில் திரியும் மாடுகளை எளிதாகப் பிடித்து, பாதுகாப்பாக வைத்து கவனிக்க முடியும். இந்த மையங்களில் மாடுகளுக்கு தீவனம், தண்ணீர், மருத்துவ சிகிச்சை, நோய் தடுப்பூசி போன்ற வசதிகள் கிடைக்கும். இவை அனைத்தும் இலவசமாகவோ அல்லது மிகக் குறைந்த கட்டணத்திலோ வழங்கப்படும். மாடுகளின் உரிமையாளர்கள் சிறிய கட்டணம் செலுத்தி தங்கள் மாடுகளை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் .
விரைவில் 14 புதிய மையங்கள் திறக்கப்பட்டால், சென்னை சாலைகளில் திரியும் மாடுகளின் எண்ணிக்கை கணிசமாக குறையும். இதனால் விபத்துகள் குறைவதுடன், போக்குவரத்தும் சுமூகமாக நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாடுகளையும் நாய்களையும் பாதுகாப்பாக வைத்து, சாலைகளை சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் வைக்க மாநகராட்சி தீவிரமாக செயல்பட்டு வருகிறது.


