சென்னை: தமிழகத்தில் அரசியல் கட்சிகள் ரோடு ஷோ நடத்த தடை விதிக்க வேண்டும் என்று அனைத்துக்கட்சி கூட்டத்தில் தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
ஆர்.எஸ்.பாரதி (திமுக): எந்த நிபந்தனைகள் விதித்தாலும், அடிப்படை உரிமைகள் மீறப்படாமல் ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். இன்று எடுக்கப்படும் முடிவு, நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படும். நீதிமன்றம் என்னென்ன திருத்தங்கள் செய்து தீர்ப்பு வழங்கும்.
ஜெயக்குமார் (அதிமுக): அரசியல் கட்சிகளின் ஜனநாயக குரல்வலையை நெரிக்கக்கூடாது. இது எல்லோருக்கும் பொதுவாக இருக்க வேண்டும். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி வேறுபாடு இல்லாமல் எடுக்க வேண்டும்.
செல்வப்பெருந்தகை (தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி, தலைவர்): பொதுக்கூட்ட பரப்புரை நடத்துவதற்கு வைப்புத் தொகை முறையை அகற்ற வேண்டும். சாதாரண மக்கள் இதனை எதிர்கொள்ள முடியாது. ஜனநாயக ரீதியாக ஜனநாயக பணிகளை ஆற்ற வேண்டும் என்றால் சிறு சிறு இயக்கங்கள், கட்சிகள் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்த வேண்டும் என்றால் இதனை எப்படி ஏற்க முடியும். ஒரு லட்சம் 10 லட்சம் என்ற அளவிலான தொகைகளை குறைக்க வேண்டும். ஏற்கனவே விதிமுறையில் உள்ளது போல பொதுக்கூட்டங்கள், பரப்புரைகள், ரோடு ஷோக்கள் நடத்தும் பொழுது ஏற்படக்கூடிய அசம்பாவிதங்களுக்கு அந்தந்த கட்சிகள் பொறுப்பேற்க வேண்டும். தேசிய தலைவர்கள் வரும்போது ரோடு ஷோ நடத்துவார்கள். ஆகவே இதற்கு தடை விதிக்க கூடாது.
பாலகிருஷ்ணன் (சிபிஎம்): அரசு சார்பில் வழங்கப்பட்ட வரைவு அறிக்கையை ஏற்கவில்லை. உயர் நீதிமன்றம் சொல்லியதற்காக அரசியல் கட்சிகளிடம் வைப்பு தொகை கேட்பது, வழிமுறைகள், கட்டுப்பாடுகள் விதிப்பது எல்லாம் காலம் காலமாக போராடி பெற்றுள்ள ஜனநாயக உரிமைகளை பறிப்பதாக அமைந்துவிடும்.. இது அரசியல் கட்சிகளுக்கு கைவிலங்கு போடுவது போல ஏற்பாடுகளை செய்யக்கூடாது. இது அரசியல் சட்டத்திற்கே விரோதமானது.
மு.வீரபாண்டியன் (இந்திய கம்யூனிஸ்ட்): இப்பொழுது நடைபெறுகின்ற ரோடு ஷோ என்பது வலுக்கட்டாயமாக மக்களை அழைத்து வருகின்றனர். இதில் பொதுமக்களுக்கு நெருக்கடி இருக்கின்றது. திரட்டி வரக்கூடிய கூட்டம் இருப்பதால் இதற்கு அனுமதி வழங்கக் கூடாது.
சிந்தனைச்செல்வன் (விசிக): தமிழ்நாட்டில் பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று இருக்கிறது. இதனை கட்டுப்படுத்த ஏற்கனவே முறைப்படுத்தப்பட்ட சட்டங்கள் உள்ளது, அதுவே போதுமானது. ரோடு ஷோ முற்றிலுமாக தடை செய்யப்பட வேண்டும்.
அபூபக்கர் (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்): ரோடு ஷோ நடத்தும்போது அதிக அளவிலான வாகனங்கள் தலைவர்களுக்கு பின்னால் வரக்கூடாது என்பதை வலியுறுத்தி இருக்கிறோம்.
ஜவாஹிருல்லா (மனித நேய மக்கள் கட்சி): இதுவரை தமிழ்நாட்டில் பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பாக பொதுக்கூட்டங்கள், பேரணிகள் நடந்து இருக்கிறது. கரூர் நிகழ்வு போல் ஒருபோதும் தமிழ்நாட்டில் சம்பவங்கள் நடந்தது இல்லை. ரோடு ஷோ முற்றிலுமாக தடை செய்யப்பட வேண்டும்.
மவுரியா (மநீம) : தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் ஏற்கனவே பின்பற்றப்பட்டு வருகிறது. வைப்பு தொகை மிகவும் அதிகமாக உள்ளதால் ஏழை, கட்சிகள் கட்டமுடியாது. எங்களை பொறுத்தவரையில் கட்சி தலைமை கூட்டத்தை நடத்தும்போது அந்த நிகழ்ச்சியில் நடக்கும் தவறு உள்ளிட்ட அனைத்திற்கும் தார்மீக பொறுப்பேற்ற வேண்டும். பொதுமக்கள், போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும்.
வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமை கட்சி): ரோடு ஷோக்கள் முழுமையாக தடை செய்யப்பட வேண்டும். உயர் நீதிமன்றம் கருத்தை சொல்லிவிட்டது என்பதற்காகவே அரசியல் கட்சியின் ஜனநாயக உரிமைகளை பறிக்க கூடாது.
முரளி சங்கர் (பாமக): ரோடு ஷோ இருக்க கூடாது என்று உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அன்புமணியும் 100 நாட்கள் ரோடு ஷோ என்பதை நடைமுறைப்படுத்தியுள்ளார். சில சமயங்களில் பல சிக்கல்களை ஏற்படுத்திவிடுகிறது. நெருக்கடியான இடங்களில் ரோடு ஷோ நடத்தப்படுவதால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இன்றைக்கும் ரோடு ஷோக்கள் நிச்சயம் நடத்தக்கூடாது.
சங்கர் (நாம் தமிழர் கட்சி): ரோடு ஷோ தமிழ்நாட்டின் கலாச்சாரம் அல்ல. தமிழ்நாட்டில் வசதி படைத்த கட்சிகள் மட்டுமே நடத்தக்கூடியது. முற்றிலுமாக ரோடு ஷோ தடை செய்யப்பட வேண்டும்.
அன்புமணி (பாமக தலைவர்): தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் நடத்தும் 5 ஆயிரம் பேருக்கும் கூடுதலானோர் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டங்களுக்கு ரூ.1 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை வைப்புத் தொகை செலுத்துவதை கட்டாயமாக்கும் வகையில் விதிகள் வகுக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. இந்த முடிவை அரசு கைவிட வேண்டும்.
