திருவாரூர்: திருத்துறைப்பூண்டி பைபாஸ் சாலையில் அதிவேகமாக சென்ற கார், சாலை தடுப்புச் சுவரில் மோதி தீப்பிடித்து எரிந்ததில் கருகிய நிலையில் ஓட்டுநர் உடல் மீட்கப்பட்டது. புதுக்கோட்டையில் மனைவியை பார்த்துவிட்டு திரும்பும் வழியில் விபத்து நடந்துள்ளது.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியிலிருந்து நாகப்பட்டினம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை சொகுசு காரை ஒருவர் அதிவேகமாக ஓட்டிச் சென்ற போது சாலையில் உள்ள தடுப்புச் சுவர் மீது பயங்கரமாக மோதியது. இதையடுத்து கார் முழுவதுமாக தீப்பிடித்து எரிந்தது.
இதனை கண்ட அந்த வழியாக சென்றவர்கள் உடனடியாக திருத்துறைப்பூண்டி காவல்துறையினருக்கும் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வருவதற்குள் முற்றிலும் கார் எரிந்து சாம்பலானது.
மேலும் காரை ஓட்டிச் சென்ற ஓட்டுநர் முழுவதுமாக எரிந்து உடல் கருகிய நிலையில் காவல்துறையினர் அவரை மீட்டனர். இதையடுத்து உடலை திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
கார் எரிந்த விபத்தில் உயிரிழந்தது திருவாரூரைச் சேர்ந்த ரபீக் என்பது தெரியவந்துள்ளது. திருமணமாகி 5 மாதங்களே ஆன இவர், புதுக்கோட்டையில் மனைவியை பார்த்துவிட்டு திரும்பும் வழியில் விபத்து நடந்துள்ளது. மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

