தண்டையார்பேட்டை: தண்டையார்பேட்டை சேனியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் திலீப் (26). இவர், தனது உறவினர் மகன் மதன் (13) என்பவனுடன் பைக்கில் காசிமேடு அருகே சென்றபோது, திடீரென நிலைதடுமாறி பைக்கில் இருந்து சிறுவன் விழுந்துள்ளான். அப்போது, அவ்வழியாக வந்த மாநகர பஸ் ஏறி இறங்கியதில் சிறுவன் மதன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.
சாலை தடுப்பு சுவரில் பைக் மோதியதில் தலையில் பலத்த காயத்துடன் சம்பவ இடத்திலேயே திலீபனும் பலியானார். இதுகுறித்து தண்டையார்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரைவர் முனிரத்தினம் (46) என்பவரை கைது செய்தனர். மற்றொரு சம்பவம்: மீனம்பாக்கம் திருவள்ளுவர் தெருவை சேர்ந்த கோவர்தன் (19), தரமணியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தார்.
இவர், நேற்று முன்தினம் பரங்கிமலை பட்ரோடு வளைவு அருகே பைக்கில் சென்றபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த பைக் சென்டர் மீடியன் மீது மோதி கீழே விழுந்தார். இதில், படுகாயமடைந்த கோவர்தன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.