Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மழை நீரால் சேதமடையாது குமரியில் நவீன தொழில்நுட்பத்துடன் சாலை அமைப்பு

*ராஜாக்கமங்கலம் ஒன்றிய பகுதியில் பணிகள் தீவிரம்

நாகர்கோவில் : குமரி மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை மற்றும் உள்ளாட்சி சாலைகள், கிராம சாலைகள், மாநில சாலைகள் என பலவிதங்கள் சாலைகள் உள்ளன. பிற மாவட்டங்களை போல் இல்லாமல் குமரி மாவட்டத்தில் அமைக்கப்படும் சாலைகள் விரைவில் பழுதடைந்து விடுகிறது.

இதற்கு காரணம் குமரி மாவட்டத்தில் பெய்யும் இரு பருவமழை மற்றும் மேடு, பள்ளம் நிறைந்த பகுதி என்பதால், விரைவில் சாலைகள் சேதமாகி விடுகின்றன. சாலைகள் புதிதாக போடும்போது அந்த சாலைகள் 3 வருடத்திற்குள் எந்தபாதிப்பு அடைந்தாலும் ஒப்பந்தகாரர் பராமரிக்க வேண்டும்.

குமரி மாவட்டத்தில் பருவமழை முடிந்தவுடன் அனைத்து சாலைகளும் சேதமாவது வருடம் தோறும் நடந்து வருகிறது. சாலைகள் போடும்போது ஜல்லிகள் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இதனால் வரும் காலங்களில் பல மலைகள் காணாமல் போகும் நிலை உருவாகியுள்ளது.

இதனை கருத்தில் கொண்டு ஜல்லிகள் அதிகமாக பயன்படுத்தாமல் சாலை அமைப்பது, அதனுடன் சாலையின் உள்ளே தண்ணீர் செல்லாமல் இருக்கும் வகையில் சாலைகள் அமைத்தால் சாலைகள் சேதமாவது தவிர்க்க முடியும்.

இதனை மையப்படுத்தி குமரி மாவட்டத்தில் முதன் முதலில் ராஜாக்கமங்கலம் ஒன்றிய பகுதியில் கீழசங்கரன்குழி, காரவிளை, கீழகடங்கன்விளை, பக்தவிளை, விளாத்திவிளை உள்ளிட்ட பகுதிகளில் பிரதமமந்திரி கிராம சாலை அமைக்கும் திட்டத்தின் கீழ் ரூ.3.5 கோடி செலவில் 3900 மீட்டர் தூரத்திற்கு சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.

வழக்கமாக சாலைகள் போடும்போது பழைய சாலையில் உள்ள தாரை பெயர்த்து எடுத்துவிட்டு, கிராவல் போட்டு, அதன் மீது தார் வைக்கப்படுகிறது. கிராவல் வைக்கும்போது அதிகமாக ஜல்லிகள் பயன்படுத்தப்படுகிறது.ஆனால் தற்போது ராஜாக்கமங்கலம் ஒன்றிய பகுதியில் குஜராத்தில் உள்ள ஒரு கம்பெனியின் தொழில்நுட்பத்துடன் ஜல்லிகளை குறைத்து சாலைகள் அமைக்கப்படுகிறது.

இதில் கிராவலுக்கு பதில் 60 சதவீதம் மண், 40 சதவீதம் முக்கால் இஞ்ச் ஜல்லி, அரை இஞ்ச் ஜல்லி, மற்றும் 3 சதவீதம் சிமெண்ட் ஆகியவற்றை கலந்து அதனுடன் டெர்ராசில், சைகோபாண்ட் எனப்படும் கரைகலை 100 லிட்டர் தண்ணீரில் 20 லிட்டர் என்ற விகிதத்தில் கலந்து கலவை தயாரித்து சாலை அமைக்கப்பட்டு வருகிறது.

சாலையில் இந்த கலவை போட்டு 7 நாட்கள் கடந்த பிறகு அதன் மீது தார் சாலை அமைக்கப்படுகிறது. இந்த டெர்ராசில், சைகோபாண்ட் கலவையை கலப்பதால், சாலையின் உள்ளே தண்ணீர் செல்வது தடுக்கப்படுகிறது. சாலையின் உள்ளே தண்ணீர் செல்லாததால் சாலைகள் பல வருடங்கள் சேதமாகாமல் உறுதியுடன் இருக்கும்.

இது குறித்து அந்த கம்பெனி அதிகாரி அருண்குமார் கூறும்போது: டெர்ராசில் மற்றும் சைகோபாண்ட் கரைசலால் மண் துகள்களுக்கு இடையிலான பிணைப்பை மேம்படுத்துகிறது. இதன் மூலம் மண்ணின் சுருக்க அடர்த்தி மற்றும் வலிமையை மேம்படுத்துகிறது.

இந்த கரைசலை பயன்படுத்தி சாலை அமைக்கும்போது மண்ணில் நீர் ஊடுருவுவதை முற்றிலுமாக தடுத்து மண் அரிப்பைக் கட்டுப்படுத்துகிறது.

இந்த நானோ தொழில்நுட்பம் மூலம் சாலைகள் அமைக்கும் போது ஜல்லி பயன்பாடு குறைகிறது. எங்கள் கம்பெனி மூலம் தமிழகத்தில் 200 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை அமைத்துக்கொடுத்துள்ளோம். இந்த சாலைகள் 5 வருடம் ஆகியும் எந்தவித சேதமும் இன்றி உள்ளது என்றார்.

15 சதவீதம் பணம் மிச்சமாகும்

கிராவல் போட்டு அதன்மீது சாலை அமைக்கும்போது 23 செ.மீ உயரத்திற்கு சாலை அமையும். ஆனால் மண், ஜல்லி, சிமென்ட் ஆகியவற்றை கலந்து டெர்ராசில், சைகோபாண்ட் கரைசலை பயன்படுத்தி சாலை அமைத்து, அதன்மீது தார் அமைக்கும் போது 20 செ.மீ உயரத்திற்கு சாலை அமையும்.

இதனால் கிராவல் மண் போட்டு சாலை அமைக்கும் போது ஏற்படும் செலவை விட, தொழில்நுட்பத்துடன் அமைக்கும் போது 10 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை பணம் மிச்சமாகிறது. மேலும் தண்ணீரால் சாலைகள் சேதமாவது முற்றிலும் தவிர்க்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.