Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

என் தாயாரை அவமதித்ததற்காக ஆர்ஜேடி, காங்கிரசை பீகார் மக்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி ஆவேசம்

பாட்னா: தனது தாயார் அவமதிக்கப்பட்டது மிகவும் வேதனை அளிப்பதாக கூறிய பிரதமர் மோடி, ‘இதற்காக ஆர்ஜேடி, காங்கிரசை நான் மன்னித்தாலும், பீகார் மக்கள் மன்னிக்க மாட்டார்கள்’ என ஆவேசமாக பேசினார்.

பீகாரில் வரும் நவம்பரில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ள நிலையில், காங்கிரஸ் சார்பில் சமீபத்தில் நடந்த வாக்காளர் அதிகார யாத்திரையின் போது தர்பங்கா பகுதியில் சிலர் பிரதமர் மோடியின் தாயார் குறித்து அவதூறாக பேசிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது.

இந்நிலையில், பீகார் மாநிலத்தில் சுய உதவிக்குழு பெண்களுக்கான புதிய கூட்டுறவு சங்கத்தை பிரதமர் மோடி டெல்லியில் நேற்று தொடங்கி வைத்து, பெண் பயனாளிகளுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் உரையாற்றியதாவது:

பீகார் மாநிலம் அன்னை ஜானகி பிறந்த பூமி. அது எப்போதும் பெண்களுக்கு மரியாதை அளித்து வருகிறது. இது சாத் பூஜை கொண்டாடப்படும் நிலம். இங்கு ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி), காங்கிரஸ் மேடையில் என் தாயார் அவமதிக்கப்பட்டுள்ளார். இப்படி நடக்கும் என்று ஒருபோதும் நான் நினைத்து பார்த்ததில்லை. இது எனது தாய்க்கு மட்டுமல்ல, பீகாரின் ஒட்டுமொத்த தாய்மார்கள், மகள்களுக்கு நேர்ந்த அவமானம். எனது வலியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

நாட்டில் உள்ள பெண்களின் நலனுக்காக நான் அயராது பாடுபட்டு வருகிறேன். என்னை பெற்றெடுத்த தாய், தாய்நாட்டிற்கு சேவை செய்ய சொன்னார். அதை நான் செய்கிறேன். ஒரு தாய் கடவுளை விட மேலானவர். தாய்மார்கள், சகோதரிகள் மீது அவதூறு பரப்புபவர்கள் பெண்களை பலவீனமாக கருதுகிறார்கள். அவர்களின் மனநிலை, பெண்களை சுரண்டுகிறது. ஒடுக்குமுறைக்கு உள்ளாக்குகிறது. பெண்களுக்கு எதிரான மனநிலை கொண்டவர்கள் ஆட்சிக்கு வரும்போதெல்லாம் தாய்மார்கள், மகள்கள், சகோதரிகள் மிகவும் துன்பங்களை சந்திக்க வேண்டியிருந்தது. அது, ஆர்ஜேடியின் மாபியா ஆட்சிக் காலத்தில் நடந்தது.

ஆர்ஜேடி ஆட்சியில் பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்தன. பெண்கள் துன்பங்களை சந்தித்தனர். அதனால் தான் அவர்கள் ஆட்சியை வெளியேற்றினர். இதற்காக அவர்கள் தற்போது பெண்களை பழிவாங்க விரும்புகின்றனர். பின்தங்கிய சமூகத்தைச் சேர்ந்த யாரும் அதிகார பதவிக்கு வருவதை காங்கிரசால் ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியவில்லை, அதனால்தான் அவர்கள் என்னை சரமாரியாக துஷ்பிரயோகம் செய்கிறார்கள். நான் அவர்களை மன்னிக்கலாம். ஆனால் பீகார் மக்கள் என் தாயை அவமதித்ததற்காக அவர்களை ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். வரும் நாட்களில் இந்தக் கட்சிகளின் தலைவர்களை தண்டிப்பார்கள். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

பீகாரில் நாளை பந்த்

பிரதமர் மோடியின் தாயாரை அவமதித்ததை கண்டித்து, பீகார் முழுவதும் நாளை காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரை 5 மணி நேரம் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக பாஜவின் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் அறிவித்துள்ளன. இதுதொடர்பாக பாஜவின் கூட்டணி கட்சிகள் நேற்று கூட்டறிக்கை வெளியிட்டன.