வாலாஜா: வாலாஜா அருகே ஆற்றுக்கால்வாயில் குளித்தபோது வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட 2 வாலிபர்கள் நேற்று சடலமாக மீட்கப்பட்டனர். ராணிப்பேட்டை மாவட்டம், பனப்பாக்கத்தை சேர்ந்தவர் மணிகண்டன்(21). இவர் சென்னை அடுத்த ஒரகடம் பகுதியில் உள்ள டிவி உற்பத்தி செய்யும் தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார்.
இவருடன் வேலை செய்யும் சென்னை திருவொற்றியூரை சேர்ந்த அருண்(24) உட்பட 9 பேர் நேற்று முன்தினம் விடுமுறை என்பதால், ஒன்றாக ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா பாலாறு அணைக்கட்டு அருகே பூண்டி கூன்மடை பாலாற்று பகுதிக்கு மதியம் 2.45 மணியளவில் வந்தனர்.அங்கு அருண், மணிகண்டன் இருவரும் ஏரிகளுக்கு தண்ணீர் செல்லும் கூன்மடை ஆற்றுக்கால்வாயில் குளித்தனர். மற்ற 7 பேர் கரையில் சமையல் செய்து கொண்டிருந்தனர்.
அப்போது மணிகண்டனும், அருணும் திடீரென வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டனர். தகவலறிந்த ராணிப்பேட்டை தீயணைப்பு துறை வீரர்கள், ரப்பர் படகுடன் விரைந்து வந்து 2 வாலிபர்களையும் தேடும் பணியில் ஈடுபட்டனர். இரவு 8 மணி வரை தேடியும் கிடைக்கவில்லை.பின்னர் நேற்று காலை 2வது நாளாக தேடும் பணியை தொடங்கினர். 9 மணி மற்றும் 9.30 மணியளவில் சம்பவம் நடந்த இடத்தில் இருந்து 10 அடி தூரத்தில் மணிகண்டனின் சடலமும், 20 அடி தூரத்தில் அருணின் சடலமும் சேற்றில் சிக்கிய நிலையில் மீட்கப்பட்டது.
