இஸ்லாமாபாத்: இந்தியாவுடன் போர் ஏற்படுவதற்கான ஆபத்துகள் உண்மையானவை என பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் தெரிவித்துள்ளார். இந்திய ராணுவ தலைமை தளபதி உபேந்திர திவேதி,தீவிரவாதத்தை தொடர்ந்து ஆதரித்தால் உலக வரைபடத்தில் பாகிஸ்தான் இருக்காது என்று இந்திய ராணுவ தலைமை தளபதி உபேந்திர திவேதி, சமீபத்தில் எச்சரித்திருந்தார். அதே போல் இந்திய விமான படை தளபதி ஏ.பி.சிங்கும் பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்த நிலையில்,பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் சமா தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். அப்போது சமீபத்தில் இந்திய அரசியல் தலைவர்கள் மற்றும் ராணுவ தளபதிகள் பாகிஸ்தானை எச்சரிக்கும் விமாக பேசிய பேச்சுக்கள் குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அமைச்சர் ஆசிப்,‘‘இந்தியாவுடன்,ஆயுத மோதலுக்கான அச்சுறுத்தல்கள் உள்ளன. இதனால் பாகிஸ்தான் கவனமாக நிலைமையை கண்காணித்து வருகிறது.
நாங்கள்(பாகிஸ்தான்) பதற்றத்தை அதிகரிக்க விரும்பவில்லை. ஆனால், போர் அபாயங்கள் உண்மையானவை. அவற்றை நான் மறுக்கவில்லை.
ஒருவேளை போர் ஏற்பட்டால்,கடவுள் நினைத்தால் முன்பை விட சிறந்த முடிவுகளை பெறுவோம். நாங்கள் பதற்றத்தை அதிகரிக்க விரும்பவில்லை. ஆனால் அபாயங்கள் உண்மையானவை. இந்தியா ஒருபோதும் ஒன்றுபட்ட நாடாக இருக்கவில்லை.அவுரங்கசீப்பின் ஆட்சியின் கீழ் தான் சிறிது காலம் வரை இந்தியா ஒன்று பட்ட நாடாக இருந்தது என்பதை வரலாறு காட்டுகிறது.அல்லாவின் பெயரால் பாகிஸ்தான் உருவாக்கப்பட்டது. உள்நாட்டில், நாங்கள் வாதிட்டு போட்டியிடுகிறோம். இந்தியாவுடனான சண்டையில், நாங்கள் ஒன்றுபடுகிறோம்’’ என்றார்.