Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

டெல்டாவில் 2.10 லட்சம் ஏக்கர் பயிர் அழுகும் அபாயம்: வாலிபர், பெண் பலி

திருச்சி: நாகை, காரைக்கால், மயிலாடுதுறையில் இன்று அதிகாலை வரை கன மழை பெய்தது. டெல்டா மாவட்டங்களில் 2.10 லட்சம் ஏக்கர் சம்பா, தாளடி இளம் பயிர்கள் 4வது நாளாக தண்ணீரில் மூழ்கியுள்ளதால் அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மழைக்கு பெண், வாலிபர் பலியாயினர். டிட்வா புயல் காரணமாக டெல்டா மாவட்டங்களில் கடந்த 28ம் தேதி பகலில் துவங்கிய மழை இடைவிடாமல் பெய்து வந்தது. நேற்று முன்தினம் பகல், இரவு என நீடித்த மழை நேற்று காலையிலும் தொடர்ந்து பெய்தது. இடைவிடாமல் மழை பெய்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது. நாகை, காரைக்கால், மயிலாடுதுறையில் இன்று அதிகாலை வரை மழை பெய்தது. அதன் பின்னர் மழை ஓய்ந்தது. தற்போது மேகமூட்டமும், அவ்வப்போது வெயிலும் மாறி மாறி நிலவி வருகிறது. திருவாரூர், தஞ்சை, புதுகை, கரூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி மாவட்டங்களில் மழை ஓய்ந்தது.

நாகை மாவட்டத்தில் 80,000 ஏக்கர், காரைக்காலில் 10,000 ஏக்கர், மயிலாடுதுறை மாவட்டத்தில் 50,000 ஏக்கர், திருவாரூர் மாவட்டத்தில் 50,000 ஏக்கர், தஞ்சை மாவட்டத்தில் 20,000 ஏக்கர் சம்பா, தாளடி பயிர்கள் என நடவு செய்து 30 முதல் 40 நாட்கள் ஆன சுமார் 2.10லட்சம் ஏக்கர் பயிர்கள் இன்றுடன் 4 நாட்களாக நீரில் மூழ்கி உள்ளது. இதனால் பயிர்கள் அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர். மழையால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் நாகூரில் பாதிக்கப்பட்ட 500பேர், வேதாரண்யம் அகஸ்தியன்பள்ளியில் 60க்கும் மேற்பட்டோர், திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகா கொல்லாபுரம் நிவாரண முகாமில் 14 பேர், முத்துப்பேட்டை தெற்குக்காடு, துறைக்காடு, இடும்பாவனம் நிவாரண முகாம்களில் 240 பேர், நீடாமங்கலத்தில் 102 பேர் என ெமாத்தம் 902 பேர் நிவாரண முகாம்களில் 2ம் நாளாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டது.

கனமழை காரணமாக நாகை மாவடடம் வெண்மணச்சேரி தென்பாதி கீழத்தெருவை சேர்ந்த சரோஜா(60) என்பவர் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து இறந்தார். இதேபோல் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே செம்பதனிருப்பை சேர்ந்த பிரதாப்(19) நேற்று பைக்கில் கடைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது காளியம்மன் கோயில் அருகே காற்றுடன் பெய்த மழையில் அறுந்து தொங்கிய மின்கம்பியில் பைக் உரசியதில் பைக்கில் மின்சாரம் பாய்ந்து அவர் அந்த இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இவர் பாலிடெக்னிக் படித்துவிட்டு வேலைக்கு செல்ல தயாராக இருந்த நிலையில் பலியானார். திருவாரூரில் மழைக்கு 10 மின் கம்பம், 80 வீடுகள் இடிந்து விழுந்தது. 27 கால்நடைகள் இறந்துள்ளது. தஞ்சையில் 11 வீடுகள் சேதமடைந்தது. 8 கால்நடைகள் பலியானது.

மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. நாகையில் உள்ளூர் விடுமுறைவிடப்பட்டுள்ள நிலையில் மழை காரணமாக காரைக்காலில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. டிட்வா புயல் காரணமாக நாகை, மயிலாடுதுறையில் இன்றும் கடல் சீற்றம் அதிகமாக இருந்தது. காற்றும் பலமாக வீசியது. இதனால் நாகை, காரைக்கால் துறைமுகங்களில் கடந்த 2 நாட்களாக 5ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டிருந்த நிலையில், இன்று காலை அது இறக்கப்பட்டு 3ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.