Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ரிஷிவந்தியம் அருகே துணிகரம் எலக்ட்ரீஷியன் வீட்டில் 29.5 பவுன் நகை, ரூ.3 லட்சம் பணம் கொள்ளை

*போலீசார் விசாரணை

ரிஷிவந்தியம் : ரிஷிவந்தியம் அருகே எலக்ட்ரீஷியன் வீட்டில் 29.5 பவுன், ரூ.3 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் அடுத்த கீழத்தேனூர் கிராமத்தை சேர்ந்தவர் சவுகத் அலி (50), எலக்ட்ரீஷியன்.

இவருக்கு 3 மகள்கள் உள்ளனர். 2 மகள்களுக்கு திருமணமான நிலையில், 3வது மகள் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் பெங்களூரில் உள்ள 2வது மகளை பார்ப்பதற்காக கடந்த 25ம் தேதி இரவு 8.45 மணியளவில் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் பெங்களூர் சென்றுள்ளார்.

26ம் தேதி இரவு 11.15 மணிக்கு வீடு திறந்து கிடப்பதாக அவருடைய தம்பி சலீம் போன் மூலமாக சவுகத் அலிக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

தகவலறிந்த சவுகத் அலி பெங்களூரில் இருந்து நேற்று காலையில் வீட்டுக்கு வந்து பார்த்தபோது அங்கு வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த பொருட்கள் சிதறி கிடப்பதை பார்த்து  திர்ச்சியடைந்தார்.

பீரோவில் இருந்த செயின், நெக்லஸ், வளையல், மோதிரம் உட்பட 29.5 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.3 லட்சம் ரொக்கப்பணம் கொள்ளை போனது தெரியவந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ.11 லட்சத்து 85 ஆயிரத்து 500 மதிப்பிலான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவலறிந்த திருக்கோவிலூர் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், ரிஷிவந்தியம் எஸ்ஐ நந்தகோபால் மற்றும் போலீசார் கொள்ளை நடந்த வீட்டில் நேற்று சோதனை மேற்கொண்டனர். மேலும் கடலூரில் இருந்து மோப்ப நாய் வெற்றி வரவழைக்கப்பட்டு, விசாரணை துரிதப்படுத்தப்பட்டது.

கைரேகை நிபுணர் ராஜவேல் வீட்டில் இருந்த தடயங்களை சேகரித்தார். கொள்ளை சம்பவம் தொடர்பாக ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். வீட்டின் பூட்டை உடைத்து சுமார் ரூ.12 லட்சம் மதிப்பிலான நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.